கேரளாவின் வடக்கஞ்சேரி பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் அரசுப் பேருந்தும்- சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் உள்பட 42 பள்ளிக் குழந்தைகள் மற்றும் 5 ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஊட்டிக்கு சென்றது. அப்போது வடக்கஞ்சேரியிலிருந்து வாலையாறு செல்லும்  தேசிய நெடுஞ்சாலையில் அந்த தனியார் பேருந்து அரசு பேருந்து உடன் மோதி விபத்து ஏற்பட்டது. 


இந்த கோர விபத்தில் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 9 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அனைவரும் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் விபத்து குறித்து சில தகவல்கள் கூறப்பட்டது. 






அதன்படி இரவு நேரத்தில் கேரளாவிலிருந்து ஒரு தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஊட்டிக்கு சுற்றுலா செல்ல இந்தப் பெருந்து கிளம்பியுள்ளது. அப்போது வடக்கன்சேரி பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு சரியாக 12 மணியளவில் வந்துள்ளது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த காரை முந்த அந்தப் பேருந்து முயற்சி செய்துள்ளது. அந்த சமயத்தில் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியுள்ளது. வேகமாக வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் சம்பவ இடத்திலேயே 9 குழந்தைகள் பலியாகினர். 


இந்த அரசு பேருந்து கேரளாவின் கோட்டாரகராவிலிருந்து கோயம்பத்தூர் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது. சுற்றுலா பேருந்தில் தனியார் பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்  மாணவர்கள் இருந்துள்ளனர்.  இவர்களில் 16 பேர் காயங்களுடன் திருச்சூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்த விபத்துக்கு சுற்றுலா பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் அலட்சியப் போக்கே காரணம் என்பதுபோல தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.  அதில் பேருந்தை இயக்கி வந்த டிரைவர், பேருந்து வேகமாக சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இருக்கையை விட்டு எழுந்து நடனமாடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்து அனைவரும் பேருந்து டிரைவரின் மிகவும் அலட்சியமான இந்த செயலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், காவல் துறை டிரைவருக்கு தக்க தண்டனை பெற்றுத் தரவேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.  தனியார் பேருந்தை இயக்கிய டிரைவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணைக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக தென் இந்தியாவைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலங்களில் முதல் இடத்தில்  உள்ளது. அதனை அடுத்த இடத்தில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேராளா அந்த வரிசையில் உள்ளன. சாலைகளில் பயணிக்கும் போது சாலை விதிகளை முறையாக பின் பற்றினாலே விபத்துகள் ஏற்படாது என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும்,   சாலைகளின் தரம் என்பது மிகவும் மோசமாக இருப்பதை யாரும் பேசுவதோ, அரசிடம் முன் வைப்பதோ இல்லை.