270 கிலோ எடையுள்ள பார் கழுத்தில் விழுந்ததால் பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பிகானரில் நடந்த இந்த துயர விபத்தில் தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியனும் தங்கப் பதக்கம் வென்றவருமான யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
என்ன நடந்தது?
ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது, தனது பயிற்சியாளரின் மேற்பார்வையின் கீழ் 270 கிலோ எடையை யாஷ்டிகா ஆச்சார்யா தூக்க முயற்சித்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது சமநிலையை இழந்ததால், கனமான பார்பெல் நழுவி அவரது கழுத்தில் விழுந்தது.
இதில் துடிதுடித்துப்போன யாஷ்டிகாவிற்கு அங்கேயே சிபிஆர் சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அனைத்து முயற்சிகளையும் மீறி, மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பிகானேரின் ஆச்சார்யா சௌக் பகுதியைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய தடகள வீராங்கனையான யாஷ்டிகா ஆச்சார்யா, தனது சாதனைகளால் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். அவரது அகால மரணம் இந்திய விளையாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
சமீபத்தில் அவர் வாங்கிய பதக்கங்கள்:
ராஜஸ்தான் மாநில பவர் லிஃப்டிங் அசோசியேஷன் ஏற்பாடு செய்த 29வது ராஜஸ்தான் மாநில சப்-ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஷிப் போட்டியில் யாஷ்டிகா தங்கம் வென்றார்.
அதேபோல் கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கத்தையும் கிளாசிக் பிரிவில் வெள்ளியையும் வென்றார்.
குடும்ப பின்னணி:
யஷ்டிகாவின் தந்தை ஐஸ்வர்யா ஆச்சார்யா (50), ஒரு ஒப்பந்ததாரர். அவருக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பவர் லிஃப்டரும் கூட.
யாஷ்டிகாவின் மரணம் குறித்து குடும்பத்தினர் எந்த சட்டப் புகாரும் பதிவு செய்யவில்லை என்று கூறப்பட்டாலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.