மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரி என்ற கிருமியால் ஏற்படும் இந்த அரிதான மற்றும் ஆபத்தான மூளைத் தொற்று நோயை கேரளா தற்போது எதிர்கொண்டு வருகிறது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Continues below advertisement




கடந்த 2023- ஆம் ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, அனைத்து மூளைக் காய்ச்சல் பாதிப்புகளையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதன் காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக, கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் என்செபாலிடிஸ் பாதிப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் சில அமீபிக் என்செபாலிடிஸ் பாதிப்புகளாகக் கண்டறியப்பட்டன.  பெரும் பாலும் தேங்கிக் கிடக்கும் மற்றும் அசுத்தமான தண்ணீர் மூலம் தான் அமீபா மூக்கு, வாய் வழியாக புகுந்து மூளை காய்ச்சலை ஏற்படுத்துகிறது.


அமீபா வைரஸ்சால் மேலும் ஒருவர் உயிரிழப்பு


இந்த பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் திருவனந்தபுரம் மாவட்டம் ஆனாடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு மனைவி வினயா (வயது 26) என்பவர் நேற்றுமுன்தினம் அமீபா மூளை காய்ச்சல் பாதித்து மரணம் அடைந்தார்.கடந்த 40 நாட்களுக்கு மேலாக அவர் நெடுமங்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அந்த வகையில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் இந்த மாதத்தில் 17 பேர் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


அமீபா பாதிப்பு அறிகுறி என்ன.?


இந்த நோயின் அறிகுறிகள்  1-9 நாட்களுக்குப் பிறகு தோன்றும். ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போல் இருக்கும், அடுத்தாக தலைவலி,வாந்தி, கழுத்து வலி ஏற்படும்.இதனையடுத்து மூளை வீக்கத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படும். இந்த நிலையில் சபரிமலைக்கு பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கேரளாவிற்கு செல்லவுள்ளனர். இதனையடுத்து பம்பா ஆற்றில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் மூடவும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து பக்தர்கள் அச்சம் அடைந்திருந்த நிலையில் எந்த வித அச்சமும் கொள்ள தேவையில்லையென தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




மேலும் கொரோனா தொற்று போல இந்த மூளையைத் தின்னும் அமீபா நோய் பரவாது எனவே சபரிமலைக்குச் செல்பவர்கள் எந்த ஒரு அச்சப்படவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைசுற்றல், உடல் வலி,  மயக்கம், சுவை மாற்றம், வாந்தி, பின்கழுத்துப் பகுதி இறுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.