ராகுல் காந்தியின் நாக்கை யார் வெட்டினாலும் 11 லட்சம் ரூபாய் தரப்படும் என சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்எல்ஏ பேசியது என்ன? அமெரிக்காவுக்கு சென்றிருந்த ராகுல் காந்தி இடஒதுக்கீடு குறித்து பேசியதற்கு சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். "ராகுல் காந்தி தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசினார்.
இடஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலையை இது காட்டுகிறது. இது காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன். தேர்தலில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது.
ராகுல் காந்தியின் கருத்துக்கள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மராத்வாடா, தங்கர், ஓபிசி போன்ற சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராடுகிறார்கள். ஆனால், அதற்கு முன்பே அதன் பலன்களை முடிவுக்கு கொண்டு வருவதை பற்றி ராகுல் காந்தி பேசுகிறார்.
அரசியல் சாசனப் புத்தகத்தைக் காட்டி, பாஜக அதை மாற்றிவிடும் என்று போலிக் கதையைப் பரப்பி வந்தார் ராகுல் காந்தி. ஆனால், நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டது காங்கிரஸ் தான்" என்றார்.
ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்தா? ராகுல் காந்தி குறித்து எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரின் கருத்துகளை ஆதரிக்கவில்லை கூட்டணி கட்சியான பாஜக விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், "கெய்க்வாட்டின் கருத்துகளை நான் ஆதரிக்கவில்லை.
ஆனால், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இடஒதுக்கீடு முன்னேறுவதைப் பாதிக்கும் என்று எதிர்த்ததை நாம் மறந்துவிட முடியாது. இடஒதுக்கீடு வழங்குவது என்பது முட்டாள்களை ஆதரிப்பது என்று ராஜீவ் காந்தி கூறியிருந்தார். இப்போது ராகுல் காந்தி, இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறுகிறார்.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் கருத்துகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிப்போம். மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றார்.
ராகுல் காந்தியை நாட்டின் நம்பர் 1 பயங்கரவாதி என்றும் அவர் இந்தியரே இல்லை என்றும் மத்திய அமைச்சரும் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களில் ஒருவருமான ரவ்னீத் சிங் பிட்டு நேற்று தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.