தனது மனைவிக்கு ஆண்குறி இருக்கிறது, அவள் பெண்ணே இல்லை, என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு வந்த இந்த மனுவை விசாரிக்கத் தயங்கிய நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய பெஞ்ச், ஒரு வழியாக வழக்கை விசாரிக்க, அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் வெளிப்படத் துவங்கியது. அந்த வழக்கை தொடர்ந்த நபர் தனது மனைவிக்கு ஆண்குறி மற்றும் பெண்குறி இரண்டும் இருப்பதாகவும் அதிலும் பெண்குறி அடைத்து இருப்பதாகவும் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை சமர்பித்திருந்தார். அதனை தொடர்ந்து அவரது மனைவியை கோர்ட் விசாரிக்க தொடங்கியது. பெண்குறியான கருவளையத்தில் குறைபாடு இருப்பது என்பது ஒரு பிறவி கோளாறு ஆகும். இதில் திறப்பு இல்லாத கருவளையம் யோனியை முழுமையாகத் தடுக்கிறது. மூத்த வழக்கறிஞர் என்.கே. மோடி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 (ஏமாற்றுதல்) இன் கீழ் இது ஒரு கிரிமினல் குற்றம் என பதிவு செய்திருக்கிறார்.
"அவள் ஒரு ஆண். இது பெரிய ஏமாற்று வேலை. தயவு செய்து மருத்துவ பதிவுகளை பாருங்கள். இது பிறவி கோளாறுகள் அல்ல. எனது கட்சிக்காரரை ஆணுக்கு திருமணம் செய்து வைத்து ஏமாற்றிய வழக்கு இது." என்று வழக்கறிஞர் மோடி வாதாடினார். அவளுடைய பிறப்புறுப்புகளைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும் என்று உறுதியாக கூறுகின்றார். இந்த மோசடி குற்றச்சாட்டை உணர்ந்து மனைவிக்கு சம்மன் அனுப்பிய ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்து ஜூன் 2021 இல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் என்.கே. மோடி வாதிட்டார். குறைபாடாக இருக்கும் கருவளையம் காரணமாக மனைவியை பெண் என்று கூற முடியாது என்பதற்கு போதிய மருத்துவ சான்றுகள் இருக்கிறது என்று மோடி புகார் கூறினார்.
"குறைபாடான பெண்குறி இருப்பதால் மட்டுமே பாலினம் பெண் இல்லை என்று சொல்ல முடியுமா? அவளது கருப்பைகள் இயல்பானதாக இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறதே?" என்று கோர்ட் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மோடி, "அந்த பெண்ணுக்கு குறைபாடுள்ள பெண்குறி மட்டும் இல்லை, அதோடு சேர்த்து ஆண்குறியும் உள்ளது. ஆண்குறி உள்ள ஒரு நபர் எவ்வாறு பெண்ணாக முடியும்?" என்று கேட்டார். மேலும் அந்த நபரை ஏமாற்றி அவரது வாழ்க்கையை நாசப்படுத்தியதற்காக அவரும் அவரது தந்தையும் சட்டத்தில் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டினார். தனது கட்சிக்காரர் வரதட்சணை அதிகமாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக மோடி தெரிவித்ததால், ஐபிசி 498 ஏ-வின் கீழ் மனைவியால் கணவர் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கும் ஒன்று உள்ளது என்று நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது. இதைத் தொடர்ந்து மனைவி, அவரது தந்தை மற்றும் மத்தியப் பிரதேச காவல்துறைக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
2016 ஆம் ஆண்டு அவர்களது திருமணத்திற்குப் பிறகு, மனைவிக்கு ஆண் பிறப்புறுப்பு இருப்பதாகவும், திருமணத்தை முடிக்க உடல் ரீதியாக இயலாது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நபர் ஆகஸ்ட் 2017 இல் மனைவி மற்றும் அவரது தந்தைக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய கோர்ட்டை அணுகினார். மறுபுறம், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை கொடுமை படுத்தியதாக மனைவி கூறி, குடும்ப ஆலோசனை மையத்தில் புகார் அளித்திருக்கிறார், சந்தை வழக்கு விசரணையிலும் கணவர் தனது மனைவியை ஒரு பெண்ணே இல்லை ஆண், என்று புகார் கூறியிருந்தார் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், குவாலியரில் உள்ள மருத்துவமனையில் மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கோர்ட் கணவர் மற்றும் அவரது சகோதரியின் வாக்குமூலங்களை பதிவுசெய்ததுடன், அவரது மனைவி மற்றும் அவரது தந்தைக்கு சம்மன் அனுப்பினார். சம்மன் அனுப்பப்பட்ட பிறகு அவரது மனைவியும், மனைவியின் தந்தையும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். மனைவி மீது வழக்குத் தொடர மருத்துவ சான்றுகள் போதுமானதாக இல்லை என்றும், அந்த நபரின் வாக்குமூலங்களுக்கு அதிக நம்பகத்தன்மையை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறி வழக்கை தள்ளுபடி செய்திருந்தது.
இதுகுறித்து பாலின நிபுணர் டேனியலா மென்டோன்கா கூறுகையில், ‘குறைபாடுள்ள கருவளையத்தை (பெண்குறி) ஒரு பாலின மாறுபாடாகக் கருதலாம். ஒரு நபரின் பாலின அடையாளம் ஆண், பெண் அல்லது டிரான்ஸ் என்று கூறப்படுவது பிறப்புறுப்பைப் பொருட்படுத்தாமல், அவர்களின் சுய அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது. 2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியம் மற்றும் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஒரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. பாலினத்தை சுயமாக அடையாளம் காணும் உரிமையை NALSA 21வது பிரிவின் மையத்தில் வைக்கிறது, இது வாழ்வதற்கான உரிமையாகும். ஒருவரின் பாலினத்தை அவர்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர அவரது பிறப்புறுப்பு அல்ல என்று சட்டம் கூறுகிறது’ என்று விளக்கினார்.