கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.


அண்ணியை கலாய்த்த பா.ஜ.க. வேட்பாளர்:


இந்நிலையில் பெல்லாரி தொகுதி பாஜக வேட்பாளர் சோமசேகர் ரெட்டி தனது போட்டி வேட்பாளாரும் தனது அண்ணியுமான அருணா லக்‌ஷ்மியை கடுமையாக விமர்சித்துள்ளார். பெல்லாரி தொகுதியில் போட்டியிடும் கேஆர்பிபி (கல்யாண ராஜ்ய பிரகதி பக்‌ஷா) வேட்பாளர் லக்‌ஷ்மி ஒரு இல்லத்தரசி. அவருக்கு தொகுதியைப் பற்றியும் தெரியாது. அரசியலும் தெரியாது என்று சோமசேகர ரெட்டி கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஜனார்த்தன ரெட்டி சிறையிலிருந்து வெளிவர நான் உதவினேன். அவருக்காக நான் 63 நாட்கள் சிறையில் இருந்தேன். ஆனால் இப்போது அவர் எனக்கு எதிராக அவரது மனைவியை தேர்தலில் நிற்கவைக்கிறார். இப்போது கடவுள் யார் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் யார் அதர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்று பார்ப்பார். அருணா லக்‌ஷ்மி ஒரு இல்லத்தரசி. அவருக்கு அரசியல் தெரியாது. வேட்பாளராக அறிவித்த பின்னர் தான் அவர் முதன்முதலில் தெருவுக்கே வருகிறார். மக்கள் பிரச்சனை என்னவென்று அவருக்கு தெரியாது. 


ஒரே தொழில் அரசியல்:


ஆனால் நான் மக்களை, மக்கள் பிரச்சனைகளை அறிந்தவன். காங்கிரஸ் வேட்பாளார் பரத் ரெட்டிக்குகூட என்னளவு தொகுதியைப் பற்றி தெரியாது. நான் இங்கே முனிசிபல் கவுன்சிலராக இருந்ததிலிருந்து கடுமையாக உழைத்திருக்கிறேன். 2008 ஆம் ஆண்டு நான் எம்எல்ஏ ஆனேன். மக்களுக்காக நிறைய உழைத்துள்ளேன். எனது ஒரே தொழில் அரசியல். அதுவும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அரசியல். எனது எண்ணமெல்லாம் நான் சார்ந்த பகுதி வளர வேண்டும் என்றார்.


ஜனார்த்தன ரெட்டி மனைவி:


அவருடைய கருத்துக்கு பதிலளித்துள்ள லக்‌ஷ்மி, நான் ஜனார்த்தன ரெட்டி மனைவியாக போட்டியிடவில்லை. நான் கேஆர்பிபி கட்சியின் சார்பாக போட்டியிடுகிறேன். இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நான் கட்சியின் தொண்டராக பணியாற்றி வருகிறேன். சாமான்ய மக்களின் குறைகளைத் தீர்க்க உதவுகிறேன். எங்கள் எதிரிகள் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் எண்ணமெல்லாம் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே என்றார்.


பெல்லாரி என்பது ஜனார்த்தன ரெட்டியின் கோட்டை. ஆனால் ஊழல் வழக்கில் சிக்கிய ஜனார்த்தன ரெட்டி பல்வேறு காரணங்களுக்காக பெல்லாரிக்கு வர தடை உள்ளது. அதனால் அவர் வேறு தொகுதியில் போட்டியிட அவரது மனைவி அருணா லக்‌ஷ்மி பெல்லாரி சிட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.


காங்கிரஸ் எம்.பி.:


காங்கிரஸ் எம்.பி. சயீது நசீர் ஹுசைன் கூறியதாவது: எங்கள் கட்சி சார்பில் பரத் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். கேஆர்பிபி கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நிரம்பிய கட்சி. அதனால் மக்கள் ஊழல்வாதிகள் நிரம்பிய கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் சட்டவிரோத சுரங்க ஊழல் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் பாஜக சார்பில் போட்டியிடும் அவரது சகோதரர் சோமசேகர ரெட்டிக்கும் நிச்சயமாக வெற்றி கிட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.