டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து தினமும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா மக்களவையில் உக்ரைன் – ரஷ்ய போர் விவகாரம் குறித்து தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சை சக எம்.பி.க்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
அவருக்கு அருகில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராமதி தொகுதியின் எம்.பி.யான சுப்ரியா சுலே அமர்ந்திருந்தார். அவருக்கு பின் வரிசையில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் அமர்ந்திருந்தார்.
பரூக் அப்துல்லா தீவிரமாக பேசிக்கொண்டிருப்பதையும் கவனிக்காமல் சுப்ரியா சுலே பின்வரிசையில் அமர்ந்திருந்த சசிதரூரிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சசிதரூரும் தனது மேசையின் மேல் சாய்ந்து கொண்டு அவர் பேசுவதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தார். கல்லூரியில் மாணவர்கள் வகுப்புக்கு இடையே அரட்டை அடிப்பது போல இருவரது செயலும் அமைந்தது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதற்கு பின்னால் புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலை ஒலிக்கவிட்டுள்ளனர். சசிதரூரும், சுப்ரியா சுலேவும் பேசுவது அந்த பாடல் வரிகளுக்கு பொருத்தமாக ஒரு படத்தில் வரும் காட்சி போலவே உள்ளது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் அடிக்கடி இதுபோன்று ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகும். தற்போது அவரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்