ரசாயனம் மற்றும் உரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காங்கிரஸ் தலைமை அவரது பெயரை பரிந்துரைத்ததை அடுத்து, நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக தரூர் நியமிக்கப்பட்டார். தூதராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர், தனது சொந்த கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த சமயத்தில் அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த தரூர், தற்போது அந்தக் குழுவின் உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் நாடாளுமன்ற நிலைக் குழு மாற்றியமைக்கப்படும். இந்த முறை, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு காங்கிரஸுக்கு ஒதுக்கவில்லை.


 






பெகாசஸ் உளவு விவகாரம், இணைய முடக்கம், பேஸ்புக் முறைகேடு குற்றச்சாட்டு போன்ற பல விஷயங்களை கடந்த ஓராண்டாக தரூர் தலைமையிலான நிலைக் குழு விவாதித்தது. 


பின்னர், அந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. ரசாயனம் மற்றும் உரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அறிவிப்பை மக்களவைச் செயலகம் இன்று வெளியிட்டது. 


 






வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், சசி தரூருக்குப் பதிலாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிலைக் குழுவில் தலைவராக எம்.கே.விஷ்ணு பிரசாத்தை சபாநாயகர் நியமித்திருப்பதாக செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. ரசாயனங்கள் மற்றும் உரங்கள் தொடர்பான நிலைக் குழுவைத் தவிர, வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி, வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி நியமிக்கப்பட்டுள்ளார்.