தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்திருந்த நிலையில், தலைவராக அவரே தொடர வேண்டும் என கட்சியின் உயர் மட்ட குழு முடிவு செய்துள்ளது. ஆனால், ராஜினாமா செய்யும் முடிவை திரும்ப பெறலாமா? வேண்டாமா? என்பதில் சரத் பவார் இறுதி முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதிர்ச்சி அளித்த சரத் பவார்:
தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்ததை தொடர்ந்து, கட்சியின் உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவரும் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், கட்சியின் தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த தலைவருமான பிரபுல் படேல் தலைமையிலான உயர் மட்ட குழு, பவாரின் முடிவை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
உயர் மட்ட குழு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல், "அன்றைய தினம் சரத் பவார் சொன்னது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் சரத் பவார் அத்தகைய முடிவை அறிவிப்பார் என்று எங்களுக்குத் தெரியாது.
அவரது அறிவிப்புக்குப் பிறகு என்ன நடந்தது, மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், சரத் பவாரை பலமுறை சந்தித்து, கட்சியின் தலைவராக நீங்களே தொடர வேண்டும் என நாடும் மாநிலமும் கட்சியும் விரும்புவதாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சரத் பவார் நாட்டின் சிறந்த மரியாதைக்குரிய தலைவர்" என்றார்.
ஸ்டாலின் விடுத்த கோரிக்கை:
சரத் பவாரின் முடிவு மகாராஷ்டிரா அரசியலை தாண்டி தேசிய அரசியலிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. பவாரின் முடிவுக்கு எதிராக கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் சிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பவார் தனது முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் கைவிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
கட்சியின் அடுத்த தலைவராக சுப்ரியா சுலேவையும் கட்சியின் மகாராஷ்டிரா முகமாக அஜித் பவாரையும் நியமிக்க மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சுப்ரியா சுலேவுக்கும் அஜித் பவாருக்கும் அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், பிரச்னையை தீர்க்கும் வகையில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியானது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தலைமையிலான சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் அடுத்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.