நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இதுவரை தொடர்பு கொண்டு பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் விளக்கமளித்துள்ளார்.
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக, காங்கிரஸ் கூட்டணி என எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆளும் பாஜக கட்சியான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் தற்போது பாஜக கூட்டணியில் உள்ளனர். இவர்கள் ஆதரவு தான் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர காரணமாக அமையவுள்ளது.
இவர்களை எப்படியாவது இந்தியா கூட்டணிக்கு கொண்டு வர அதில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முழு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பேசியதாகவும் நேற்று தகவல் வெளியானது. ஆனால் டெல்லியில் இந்தியா கூட்டணியினரின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக வருகை தந்துள்ள சரத் பவார் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இதுவரை தொடர்பு கொண்டு பேசவில்லை என கூறினார். மேலும் எங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளை பற்றி இந்தியா கூட்டணியினரின் சந்திப்பின் போது ஆலோசனை செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.