இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் சரத் பவார் முக்கியமானவர். இவர், தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிராவில் முக்கிய அரசியல் கட்சியாக உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிவதாக சரத் பவார் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Continues below advertisement

ஆனால், தொண்டர்கள், கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்று கொண்டார்.

அதிகார போட்டியில் முந்தும் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே:

Continues below advertisement

இந்த சூழ்நிலையில், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக அறிவிக்கப்பட்டனர். மகராஷ்டிரா, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில பொறுப்பு சுப்ரியா சுலேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரத் பவாரின் அண்ணன் மகனும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அஜித் பவாருக்கும் சுப்ரியா சுலேவுக்கும் அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், சுலேவுக்கு பதவி கொடுக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அஜித் பவாருக்கு ஏன் பதவி வழங்கப்படவில்லை என செய்தியாளர் ஒருவர் சரத் பவாரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், "நாடு முழுவதும் கட்சியின் விவகாரங்களை கவனிப்பதற்காக இரண்டு செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து மாநிலங்களின் பொறுப்பையும் ஒருவரிடம் கொடுப்பது தவறு என்பது நாட்டில் நிலவும் சூழலை வைத்து புரிந்து கொள்ளலாம். அஜித் பவார், ஏற்கனவே நிறைய பொறுப்புகளை கையாள்கிறார்" என்றார்.

கட்சி அலுவலகத்தில் இருந்து கோபமாக வெளியேறிய அஜித் பவார்:

இன்று, சரத் பவாரின் அறிவிப்பால் அஜித் பவார் கோபமடைந்து, மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசாமல் வெளியேறினார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள சரத் பவார், கட்சி தலைமைக்கு எதிராக பல முறை முடிவுகளை எடுத்துள்ளார். அஜித் பவார், 2019இல் பாஜகவுடன் கைகோர்த்து, ஆட்சி அமைத்தார். தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றபோது, துணை முதலமைச்சர் பதவி அஜித் பவாருக்கு அளிக்கப்பட்டது.

தனக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய பிரபுல் படேல், "நான் 1999 முதல் பவாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். எனவே, இது எனக்கு புதிதல்ல. நிச்சயமாக, நான் செயல் தலைவராக உயர்த்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கட்சியின் கால்தடத்தை அதிகரிக்க தொடர்ந்து பாடுபடுவேன்" என்றார்.

மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் பொறுப்பு பிரபுல் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.