கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல், பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. இந்தாண்டின் இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் அடுத்தாண்டு மக்களவை தேர்தலும் நடத்தப்பட உள்ளதால் பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படமா?
இந்நிலையில், பிரதமராக மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார். அப்போது, பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடும் நிலையில் நான் இல்லை. என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சீராக இருந்தால், அடுத்த காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இருக்கும். நுகர்வோர்கள் எந்த விதமான சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்.
ரஃபேல் உள்ளிட்ட விவகாரங்களில் ராகுல் காந்தியின் கருத்தை கடுமையாக சாடிய அவர், "அரசியல் என்பது நம்பகத்தன்மையை சார்ந்து இருக்கிறது. ராகுல் காந்தியின் கருத்துகள் தவறானவை என்று கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களின் போது அவருக்கு சிறுபான்மையினரின் நிலை திடீரென நினைவுக்கு வருகிறது.
"ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்த இந்திய பொருளாதாரம்"
1983ஆம் ஆண்டு நெல்லியில் முஸ்லிம்கள் படுகொலையும், 1984இல் சீக்கியர்கள் படுகொலையும் காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்தது.
மோடியின் ஆட்சியில்தால் உள்கட்டமைப்பு துறை வளர்ச்சி கண்டது. அவரது கண்பார்வை சரிபார்க்கப்பட வேண்டும். அவர் தவறான கண்ணாடி அணிந்திருக்கலாம்" என்றார்.
பிற வளர்ச்சி புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் உலகளவில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது" என்றார்.
எதிர்க்கட்சிகளை சாடிய அவர், "ஒருவர் அனைத்தையும் இலவசமாக கொடுக்க விரும்பலாம். ஆனால், பின்னர் அவர்கள் இலவச அரசியலின் ஆபத்தான எல்லைக்குள் நுழைந்துவிடுவார்கள். விலை நிர்ணயம் என்பது நிலையான விஷயம் அல்ல. அது மாறி கொண்டே இருக்கும்.
அரசு தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு உதவ பல நலத்திட்டங்களை எடுத்துள்ளது.
வாட் வரியை குறைக்காமல் பாஜக அரசுகளை விட அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை விற்கும் போது பெட்ரோல் விலை குறித்து பாஜக அல்லாத மாநில அரசுகள் குரல் கொடுக்கின்றன" என்றார்.
"பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் நிலைத்தன்மையை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது. மலிவு விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் கொள்கைகளை பின்பற்றியதற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். அரசாங்கத்தின் கொள்கைகள் உறுதியானவை. முன்னோக்கு கொண்டு செல்பவை. நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படுகின்றன. அதற்கு பிரதமர் மோடியின் தீர்க்கமான தலைமையே காரணம்" என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.