யார் இந்த சின்மயானந்த்?:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 75 வயதான சின்மயானந்த், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். பாஜகவை சேர்ந்த அவர் முமுக்சு எனும் ஆசிரமத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு சின்மயானந்த் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, அவரது ஆசிரமத்தை சேர்ந்த பெண் சீடர் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
வழக்கு விசாரணை:
இதையடுத்து சின்மயானந்திற்கு எதிரான வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. இருதரப்பு வாதங்களும் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 20218ம் ஆண்டு சின்மயானந்திற்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என, உத்தரபிரதேச அரசு மாவட்ட மாஜிஸ்திரேட் மூலம் நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அரசின் முடிவுக்கு பாதிக்கப்பட்ட பெண் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். இதன் காரணமாக சின்மயானந்திற்கு எதிரான வழக்கை திரும்பப்பெறும் அரசின் விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, சின்மயானந்திற்கு ஜாமின் கிடைக்கக் கூடிய வகையிலான கைது உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்தது.
இதையடுத்து தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சின்மயானந்த் தாக்கல் செய்த மனுக்கள், அடுத்தடுத்து உத்தரபிரதேச உயர்நீதிமன்றத்திலும், டெல்லி உச்சநீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டன. அதோடு, தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சஹஜன்பூர் நீதிமன்றத்தில் நவம்பர் 30ம் தேதி, சின்மயானந்த் ஆஜராக வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்ய உத்தரவு:
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சின்மயானந்த் விசாரணைக்கு ஆஜராகாததால். அவரை கைது செய்து டிசம்பர் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும், சஹஜன்பூர் சிறப்பு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது .
சின்மயானந்த் தரப்பு விளக்கம்:
முன் ஜாமின்கோரி உயர்நீதிமன்றத்தில் சின்மயானந்த் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த மனு 6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதன் காரணமாக தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். ஆனால் அதை நிராகரித்ததோடு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, விசாரணைக்கு ஆஜராகாத சின்மயானந்தை கைது செய்து டிசம்பர் 9ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என, சஹஜன்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.