இன்று முகலாய மன்னர் ஷாஜஹானின் 430வது பிறந்த நாள். முகலாய மன்னர் ஷாஜஹானின் பெயரைக் கேட்டவுடன், நம் நினைவுக்கு வருவது அவரது ஆட்சியில் கட்டப்பட்ட `தாஜ் மஹால்.’ உலக அதிசயமாகக் கருதப்படும் தாஜ் மஹால் காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது. தன் மனைவி மும்தாஜின் மரணத்திற்குப் பிறகு, அவரது நினைவாக ஷாஜஹான் கட்டிய பளிங்கு மாளிகை, தாஜ் மஹால்.
பெர்ஷிய நாட்டு இளவரசியும், தன் மனைவியுமான மும்தாஜ் மஹாலின் மரணத்திற்குப் பிறகு, அதில் இருந்து முகலாய மன்னர் ஷாஜஹானால் மீள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே உலகத்தில் யாருக்கும் இல்லாத அளவில், மிகவும் அழகான கல்லறையை யமுனை ஆற்றின் கரையின் எழுப்பும் முயற்சியில் தாஜ் மஹாலைக் கட்டினார் மன்னர் ஷாஜஹான்.
சுமார் 20 ஆயிரம் கலைஞர்கள் சேர்ந்து, ஏறத்தாழ 22 ஆண்டுகளாக தாஜ் மஹால் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு, பல்வேறு வடிவமைப்பு விவரங்களுடனும், விலை மதிப்பில்லாத கற்கள் பதிக்கப்பட்டும் உருவானது தாஜ் மஹால். பெர்ஷியா நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் உஸ்தாத் அகமத் லாஹூரியின் தலைமையில் தாஜ் மஹாலின் கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தலைமை சிற்பியாக வட இந்தியாவைச் சேர்ந்த சிரஞ்சிலால் பணியாற்றினார். தற்போதைய மதிப்பின் படி, தாஜ் மஹால் கட்டுவதற்காக சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டது.
தன் சொந்தக் காதலுக்கான சின்னமாக ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹால் தொடர்ந்து முகலாய அரசின் கஜானாவைப் பதம் பார்த்தது. ஷாஜஹான் டெல்லியில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்க, அவரது மகன் ஔரங்கசீப் தக்காணப் பிரதேசத்தில் இருந்து நாட்டின் பல்வேறு சிக்கல்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். தாஜ் மஹால் கட்டுமானத்திற்காக முகலாய அரசு அதிக நிதியைப் பயன்படுத்தியதை எதிர்த்து பகிரங்கமாக ஔரங்கசீப் எழுப்பிய விமர்சனங்கள் ஷாஜஹானின் காதுகளில் விழவில்லை. அனைத்து விலை உயர்ந்த பொருள்களும் பாரபட்சமின்றி தாஜ் மஹாலின் கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இந்தியா முழுவதும் இருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த பொருள்கள் தாஜ் மஹாலின் கட்டுமானத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டன. அரசு கஜானா காலியாகத் தொடங்கிய பிறகு, மன்னர் ஷாஜஹானின் துயரத்தில் பங்குகொள்ள மக்களிடம் இருந்து அதிக வரி வசூல் செய்யப்பட்டு தாஜ் மஹால் கட்டப்பட்டது.
போதிய பணம் இல்லாததால் இந்தியாவுக்குள் வியாபாரத்திற்காக நுழைந்த ஐரோப்பியர்களிடம் கடன் பெறத் தொடங்கினார் ஷாஜஹான். அவ்வாறு அவரால் கடன் பெறப்பட்ட நிறுவனமான கிழக்கு இந்தியக் கம்பெனி சில நூற்றாண்டுகளில் இந்தியாவையே வளைத்துப் போட்டது வரலாறு. ஷாஜஹானின் கனவுத் திட்டமான தாஜ் மஹால் இந்தியாவில் ஐரோப்பியக் காலனியத்திற்கு விதையிட்டது. மாமன்னராகப் பட்டம் பெற்றிருந்த ஷாஜஹானை எதிர்த்த ஒரே நபர், அவரது மகன் ஔரங்கசீப். தன் தந்தையை எதிர்த்ததன் விளைவாகவே, தக்காணப் பகுதிக்கு 30 ஆண்டுகள் அனுப்பப்பட்டார் ஔரங்கசீப். தன் தந்தையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்த போது, அவர்களை அடக்கும் பொறுப்பு ஔரங்கசீப்பிற்கு வழங்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, கிளர்ச்சியின் மூலம் மன்னராகப் பதவியேற்ற ஔரங்கசீப், தன் தந்தை ஷாஜஹானுக்கு ஆக்ரா கோட்டையில் இடம் தந்து, தாஜ் மஹாலைத் தினமும் பார்வையிடும் வாய்ப்பைத் தந்தார். முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் சின்னமாக மாறிய தாஜ் மஹாலைத் தன் இறுதிக் காலத்தில் பார்ப்பதற்காகவே ஔரங்கசீப் இவ்வாறு செய்தார் எனக் கூறும் வரலாற்று ஆய்வாளர்களும் உண்டு.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை, தாஜ் மஹால் ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்துள்ளது.