கொரோனா இரண்டாவது அலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (INSACOG) மூத்த விஞ்ஞானி ஷாகில் ஜமீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவை ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உறுதி செய்த ஜமீல், "ஆம் அது உண்மையே, ஆனால் அதற்கான விளக்கத்தை சொல்லத் தேவையில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

அண்மையில் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கையில் இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பற்றி ஜமீல் எழுதியிருந்தது, உலக நாடுகளின் கவனம் ஈர்த்தது. உள்நாட்டின் அதிருப்தியையும் பெற்றது.

அந்தக் கட்டுரையில் அவர், "இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. நாட்டில் தடுப்பூசிப் பற்றாக்குறை இருக்கிறது. அன்றாட கொரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தையும் தாண்டி பதிவாவது மிகவும் மோசமான சமிக்ஞை. 

முதல் அலையை ஒப்பிடும்போது இரண்டாம் அலை துவக்கமே அதிக பாதிப்புகளை கொண்டதாக இருந்தது. இதனால், இந்தியாவில் ஜூலை மாதம் வரை கொரோனா பாதிப்பு நீடிக்கலாம். 

 



உண்மையில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால், அப்போதும் விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் இரண்டாம் அலை ஏற்படுத்தாமல் தடுக்க பெருங்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்தனர். ஆனால், அதை மத்திய அரசு அசட்டை செய்துவிட்டது. மதநிகழ்வுகளும், தேர்தல் பிரச்சாரங்களும் தாராளமாக நடந்தது. இதனால், இன்று இந்தியாவில் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. 

 

இந்த வேளையில், கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய வேண்டும். கரோனா நோயாளிகளுக்கான மருத்துவப் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும், ஓய்வு பெற்ற மருத்துவர்கள், செவிலியரை பணிக்கு அழைத்து மருத்துவப் பணியாளர்கள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மருத்துவ ஆக்சிஜன் விநியோக முறையை சீர்படுத்த வேண்டும். கடந்த ஜனவரிக்கு முன்னர் இருந்ததுபோல் தற்காலிக கோவிட் கேர் மையங்களை அமைக்க வேண்டும்.

இதை எனது சக விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றனர். ஆமோதிக்கின்றனர். ஆனால், கொள்கைகளை வகுப்பது அரசாங்கம் தானே. உண்மையான கள நிலவர ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை வகுக்க யாரும் தயாராக இல்லை. கள நிலவர ஆதாரங்கள் அடிப்படையில் கொள்கைகளை வகுக்க வேண்டியது நம் தேசம் எதிர்நோக்கியிருக்கும் இன்னொரு அவசரநிலை. இந்தியாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்ட நிலையில் சரியான தரவுகளைக் கொண்டு கொள்கைகளை வகுப்பது மிகவும் அவசியமானது. இல்லாவிட்டால் இப்போது நிகழும் கரோனா மரணங்கள் நம் தேசத்தின் மீது நீங்கா வடுவை ஏற்படுத்திவிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.



 

இதுமட்டுமல்லாது பல்வேறு ஊடகங்களுக்கு அவர் பளிச் பேட்டி அளித்திருந்தார். ஜனவரி மாதத்தில் கரோனா இந்தியாவிலிருந்து ஒழிந்துவிட்டதாக அரசும் அரசு அதிகாரிகளும் தாமாகவே முடிவு செய்துவிட்டனர். அதுவே, இரண்டாவது அலை தொடக்கமே அச்சுறுத்தும் வகையில் ஆரம்பித்ததற்குக் காரணம் என்றும் பேசியிருந்தார். 

இது மத்திய அரசில் உயர்மட்ட அளவில் புகையத் தொடங்கியது. அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதா என்ற கண்டனக் குரல்களும் எழுந்தன.
இந்நிலையில், ஷாகில் ஜமீல் கரோனா வைரஸ் மரபணு மாற்றம் ஆராய்ச்சிக் கூட்டமைப்பில் (INSACOG) இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்சாகாக் என்ற கூட்டமைப்பு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. கரோனா பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ் கோவி 2  (SARS-CoV2 ) வைரஸின் மரபியல் மாற்றம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தக் குழுவானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் பத்து இடங்களில் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு கொரோனா மரபியல் மாற்றம் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.