இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கிராமப்புற மக்களுக்கும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவத் தேவைகள் உறுதிசெய்யப்பட வேண்டும், கொரோனாவுக்கான ரேப்பிட் பரிசோதனைகள் கிராமங்களில் வீடுவீடாகச் சென்று மேற்கொள்ளப்படவேண்டும் என அண்மையில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். கிராமங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிற தகவலை அடுத்து அவரது இந்த உத்தரவு வெளியானது. இதையடுத்து மத்திய அரசு கிராமங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கான புதிய வழிகாட்டுதல்களைத் தற்போது வெளியிட்டுள்ளது.




மத்தியப்பிரதேசத்தில் சுசேனர் கிராமத்தில் அண்மையில் மரங்களுக்கடியில் போர்வை விரித்து கொரோனா சிகிச்சை தரப்பட்ட புகைப்படங்கள் வைரலானது. அங்கே தாப்லி என்னும் மற்றொரு கிராமம் கொரோனாவால் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழையாமல் நகரத்திலிருந்து ஒட்டுமொத்தமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளது. மகாராஷ்டிராவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நகரங்களை விட கிராமப்புறப் பகுதிகளில்தான் அதிகரித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் கடந்த ஏப்ரலில் கொரோனா விதிமுறைகளை மீறி உள்ளாட்சித் தேர்தல் நடத்தியது அங்கே கிராமப்புறங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. தனியாகப் புள்ளிவிவரங்கள் எதும் கிடைக்கப்பெறவில்லை என்றாலும் ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் கிராமங்களில் இருந்து கொரோனா புகார்கள் அதிகரித்து வருகின்றன.


தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெருநகரம் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி போன்ற இதர நகரங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் கன்னியாகுமரியில் மட்டும் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் 206 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.கோவையின் நாளொன்றுக்கான புதிய கொரோனா பாதிப்பு மட்டும் 3166.








இந்த நிலையில்தான் தற்போது மத்திய அரசின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ கான்பிரன்சிங் முறையில் சந்தித்த மருத்துவர் வி.கே.பால் தலைமையிலான நிதி ஆயோக் அமர்வு பிரதமரின் உத்தரவின் பேரில் இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி கிராமங்களில் களத்தில் இருக்கும் சுகாதார அதிகாரிகள்  ரேப்பிட் கொரோனா பரிசோதனைகளை (Rapid antigen test) வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளார்கள்.




மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பெரும்பாலும் பொதுச்சுகாதாரத்தையே நம்பியிருக்கும் நிலையில் 2018ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவிகிதம் மட்டுமே நாம் பொதுச் சுகாதாரத்துக்காகச் செலவழித்துள்ளோம்.


மாநில சுகாதாரச் செயலாளர்கள் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் வட்டார அலுவலர்களுடன் தினசரி மறுஆய்வுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களப்பணியில்  ஈடுபடும் ஆஷா உள்ளிட்ட குழுக்களுக்கு கொரோனா பரவல் கட்டுப்பாடு , பரிசோதனை தொடர்பான பயிற்சிகளை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற சுகாதார மற்றும் துப்புரவு மேம்பாட்டுக் குழுக்களை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முதன்மை செயல்பாட்டாளர்களாக ஈடுபடுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பங்களிப்பை இந்தச் சூழலில் உறுதிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனா பாதிக்கப்படும் கிராமப்புற மக்களுக்கான தனிமைப்படுத்துதல், கொரோனா கேர் மையங்களை அமைத்தல், அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைப்பிரிவுகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றையின் மாநிலங்கள் உறுதிசெய்யவேண்டும் என அந்த வழிகாட்டுதல்களில் மத்தியக்குழு குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு கிராமங்களில் தான் வசிக்கின்றனர். இந்த மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பெரும்பாலும் பொதுச்சுகாதாரத்தையே நம்பியிருக்கும் நிலையில் 2018ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவிகிதம் மட்டுமே நாம் பொதுச்சுகாதாரத்துக்காகச் செலவழித்துள்ளோம். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி 1000 பேருக்கு 1 பயிற்சியளிக்கப்பட்ட மருத்துவர் என்றில்லாமல் இந்தியாவில் 1497 பேருக்கு 1 மருத்துவர் என்கிற நிலையே இருக்கிறது. ஆனால் நகர்ப்புறங்களில் 4 மடங்கு அதிகமாகவே பயிற்சியளிக்கப்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். அரசு உரிய வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்குக் கொடுத்தாலும், மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவத் தேவைகளில் போதாமை மேலும் ஆஷா உள்ளிட்ட முதன்மை மருத்துவப் பணியாளர்களை மட்டுமே நம்பியிருக்கும் சூழலில் கிராமப்புறங்களில் அதிகரித்துவரும் கொரோனா எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியுமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.