சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் கலந்து கொண்ட சர்ச்சையில் சிக்கியுள்ள பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நீதிமன்ற விசாரணைக்கு முன்னர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜெஜெ மருத்துவமனையில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


மும்பையிலிருந்து கோவாவுக்கு அக்டோபர் 2ம் தேதி இரவு கார்டீலியா என்ற சொகுசுக் கப்பல் புறப்பட்டது. இதில் போதைப் பார்ட்டி நடப்பதாக போலீஸுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதனையடுத்து கப்பலியேயே சில அதிகாரிகள் பயணிகள் போல் பயணித்தனர். கப்பல் கிளம்பியுடன் பார்ட்டி தொடங்க அதிகாரிகள் அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்ததாக சொல்லப்படுகிறது


பாலிவுட் பிரபலம் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், மூன் மூன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மித் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ரந்த் சோக்கர், கோமித் சோப்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அவர்கள் மீது போதையூட்டும் பொருட்களின் கட்டுப்பாடு மற்றும் வரைமுறை தொடர்பான என்.டி.பி.எஸ் (Narcotic Drugs and Psychotropic Substances Act) சட்டத்தின் 8C, 20 B, 27 ஆகிய பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நேற்று முதலே விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில், அவரை விசாரிக்க கூடுதல் கால அவகாசம் கோரி என்சிபி சாபில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் என்சிபி அதிகாரிகளுடன் அலுவலகத்திலிருந்து வெளியே வர புகைப்பட நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அவரை விதவிதமாக புகைப்படம் எடுத்தனர். ஆர்யன் கான் வெளியே வர அவரைப் பின் தொடர்ந்து கருப்பு நிற ஆடையுடன் தலையை முழுவதுமாக மறைத்த இளம் பெண் ஒருவரும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தார்.




ஷாருக்குக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர். இவர்களின் வீடு மன்னத் என்ற பெயரில் அறியப்படுகிறது. பாலிவுட் வட்டாரத்தில் ஷாருக்கானை கிங் கான் என்றே அனைவரும் அழைப்பதற்கு ஏற்ப அவரது மன்னத் பங்களாவும் கிட்டத்தட்ட மினி அரண்மனை போலவே இருக்கும். ஷாருக்கான் மனைவி, சுஹானா, ஆர்யன் என அனைவரும் சமூக வலைதளங்களில் விறுவிறுப்பாக இயங்கக்கூடியவர்கள். அவ்வப்போது இன்ஸ்டா பக்கங்களில் தங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து கவனம் ஈர்ப்பர். அண்மையில் கூட சுஹானாவின் பிகினி உடை புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது.


இந்நிலையில் தான் ஆர்யன் கான் போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று நீதிமன்றத்தில் வாதாடிய ஷாருக்கானின் வழக்கறிஞர், ஆர்யன் கானை போலீஸார் பிடித்தபோது அவரிடம் போதை பொருள் ஏதுமில்லை. அவர் அந்த சொகுசுக் கப்பலின் ப்ரீமியம் விருந்தாளி என்று கூறினார். ஆனால், அவரது உடைமைகளில் போதைப் பொருள் இருந்ததாக என்சிபி கூறுகிறது.