இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் கிளம்பிய 3 நாள் பயணத்தில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்து, கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறி, போதை பொருள் பயன்படுத்தியவர்களை கைது செய்தனர், அவர்களுள் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் காணும் இருப்பது குறிப்பிடத்தக்கது.



கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து மஃப்டியில் இருந்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிர்ந்தனர். சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை கடல் பகுதியில் இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததால் அந்த கப்பல் முழுதும் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது. ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டு மருத்துவச் சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டிருப்பதை அவருடைய வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.



இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் இருந்த நடிகர் ஷாருக்கான் மகனுடன் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் ஒருவர் செல்ஃபி எடுத்திருந்ததாக ஒரு புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். அவரோடு சிரித்துக்கொண்டு ஒருவர் செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார். அதை கண்ட நெட்டிசன்கள் அலுவலர்களின் செலிபிரிட்டி மோகத்தை, செல்பி மோகத்தை விமர்சனத்துக்குள்ளாக்கினர். விசாரணைக்கு வந்தவருடன் செல்பியா என்று பலர் போதை பொருள் தடுப்பு துறையையே வசை பாடினர். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது NCB அலுவலர் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.