கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாகக் கூறி, ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஷாருக்கானின் மகனை கைது செய்தவர் அந்த சமயத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குநராக பதவி வகித்த சமீர் வான்கடே.
மிரட்டப்பட்ட ஷாருக்கான் குடும்பம்:
இதையடுத்து, ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் 22 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, போதை தடுப்பு பிரிவி அவரை குற்றத்தில் இருந்து விடுவித்தது. இந்த வழக்கில், ஆர்யன் கானை விடுவிப்பதற்காக ஷாருக்கான் குடும்பத்திடம் சமீர் வான்கடே 25 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் சில ஆதாரங்களை சமீர் வான்கடே தரப்பு சமர்பித்துள்ளது. அதில், ஷாருக்கானிடம் மேற்கொண்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் எனக் கூறி, சில ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆர்யன் கானை விட்டுவிடும்படி ஷாருக்கான் கெஞ்சியது போல சில உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வாட்ஸ்அப் சாட்டை வெளியிட்ட சமீர் வான்கடே:
"தயவு செய்து அவரை அந்த சிறையில் அடைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். (ஆர்யன் கான்) அவர் மனது உடைந்துவிடுவார். சில ஆட்கள், அவரது உணர்வை பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள். என் குழந்தையை சீர்திருத்தம் செய்வேன் என்று உறுதியளித்துள்ளாய், அவர் முழுவதுமாக அடிபட்டு உடைந்து வெளியே வரக்கூடிய இடத்தில் அவரை வைக்க வேண்டாம். மேலும் அது அவருடைய தவறில்லை.
என்னிடமும் என் குடும்பத்திலும் கருணை காட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஒரு எளிய மனிதர்கள். என் மகன் சற்று வழிதவறிவிட்டான். ஆனால், அவன் ஒரு கடுமையான குற்றவாளியைப் போல சிறையில் இருக்கத் தகுதியற்றவன். அது உங்களுக்கும் தெரியும். இதயம் படைத்தவனாக இருங்கள்" என வாட்ஸ்அப் உரையாடலில் ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் அளிக்காத ஷாருக்:
இதற்கு பதில் அளித்துள்ள சமீர் வான்கடே, "ஷாருக், நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று எனக்குத் தெரியும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம். உங்களை பார்த்து கொள்ளுங்கள்" என வாட்ஸ்அப் உரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உரையாடல் உண்மையானதா என்பது குறித்து ஷாருக்கான் தரப்பு இன்னும் பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. தன்னுடைய குடும்பத்துடன் சமீர் வான்கடே, பல முறை வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது.