ஆர்யான் கான், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் மகன். செலிப்ரிட்டி கிட் என்ற அந்தஸ்தில் வலம் வந்தவர் இப்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைபட்டிருக்கிறார். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைதானார் ஆர்யன் கான். அவருடன் கார்டீலியா சொகுசுக் கப்பலில் இன்னும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 


ஒரு முறை இரண்டு முறை அல்ல பலமுறை ஜாமீன் கோரியும் ஜாமீன் கிடைக்கவில்லை. இன்னும் 5 நாட்களுக்கு அவருக்கு சிறைவாசம் தான். இந்நிலையில் இன்று ஆர்யன் கானை அவரது தந்தை ஷாருக்கான் சந்தித்தார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலைக்கு வந்த அவர் மகனைப் பார்க்க வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அந்த 18 நிமிடங்கள் முடிந்து வெளியே வந்த ஷாருக்கான் அமைதியாக இருந்தார். அமைதி என்பதைவிட இறுக்கம் என்றே கூற வேண்டும். 






ஷாருக்கானைப் பார்க்க ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது. சிறையில் இருந்து வெளிவரும் போது அனைவரையும் பார்த்து ஒரு கும்பிடு வைத்துவந்தார்


ஆர்யன் கான் வெளிநாட்டில் படித்தவர். எப்போதும் பார்ட்டி கொண்டாட்டம் என இருப்பவர் என்பதால் அவரை பற்றி மட்டுமே இந்த வழக்கில் பெரிதாகப் பேசுகிறோம். ஆனால், இந்த வழக்கில் சிக்கிய அனைவருமே ஹை புரொஃபைல் பேர்வழிகள்தான். அர்பாஸ் மெர்சன்ட் என்ற ஆர்யனின் நெருங்கிய நண்பர் அஸ்லாம் மெர்சன்ட் என்ற பெரும் பணக்காரரின் மகன். இவர் மர வியாபார தொழில் செய்கிறார். இதைவிட முத்தாய்ப்பானது அர்பாஸ் மெர்சன்ட்டின் தந்தைவழி தாத்தா ஒரு நீதிபதியாக இருந்தவர் என்பதே.




மூன்மூன் தமேச்சா என்ற பெண் ஒரு மாடல் அழகி. இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 30.5K பேர் பின் தொடர்கின்றனர். அக்‌ஷய் குமார், விக்கி கவுசால் போன்ற பிரபலங்கள் கூட இவரைப் பின் தொடர்கின்றனர். ஆனால் இவருக்கு வயது 39. இவர் தான் மற்ற ஸ்டார் கிட்ஸ்களுக்கும் சர்வதேச போதைப் பொருள் விற்பனைக் கும்பலுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


ஆனால், கப்பலில்  ஆர்யன்கானிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கப்பலில் சோதனை நடத்தியபோது அவரிடம் பணம் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் குறிப்பிடுவதுபோல, 13 கிராம் கொக்கையினோ, மெஃபெட்ரோன் பரவச மாத்திரைகள் ஆகியவற்றை ஆர்யன்கான் வைத்திருக்கவில்லை. அவரிடம் பணம் இருக்கவில்லை. போதை மருந்துகளை உட்கொள்ளவோ, விற்கவோ அவர் திட்டமிடவுமில்லை என்றும் தெரிவித்தார்.