மத்திய அரசி மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய விவசாயக் கூட்டமைப்பான 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' அமைப்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், கூடுதல் வரிகளின் மூலமாக ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு (bharat bandh) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு மாநில அரசாங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் நேரடி ஆதரவுகள் தெரிவித்துள்ள நிலையில், பீகார் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
போராட்ட முறை: சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்ட செய்திக் குறிப்பில், " நாடு முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள், முக்கிய விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் மூடப்படும். இருப்பினும், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மற்றும் மருந்துகள் உற்பத்தி, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அத்தியாவசிய நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க வகை செய்ய வேண்டும். அமைதியான முறையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் கலந்து கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நெடுநாட்களாக போராடும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு வலியுறித்தியுள்ளது.
காங்கிரஸ் ஆதரவு: நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிதுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக வேளாண் துறைகள் மீது மோடி அரசாங்கம் திட்டமுட்டத் தாக்குதல் நடத்து வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச அரசு ஆதரவு: இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. மேலும், விசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலை தனியார் மயமாக்கலை கண்டித்து வரும் தொழிலாளர்களுக்கும் அம்மாநில அரசு ஆதரவு அளித்தது.
திமுக ஆதரவு: மூன்று புதிய வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி அகில இந்திய விவசாய கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு நடத்த இருக்கும் செப்டம்பர் 27 நாடு தழுவிய முழு அடைப்பில் தமிழக விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் பொதுமக்களும் வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து சமூக அமைப்புக்களும் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று திமுக தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27 அன்று தமிழகத்தில் நடைபெற இருக்கும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறவேண்டும், பெட்ரோல் டீசல் விலை மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம், பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் ஜனநாய விரோதப்போக்கு இவைகளை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவு என்பது ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிரொலிக்கும் வகையில் அமைந்திடவேண்டும் என்றும் தெரிவித்தது.
வேளாண் சட்டங்கள்:
விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்த மசோதா 2020 ஆகிய மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை மத்திய அரசு கடந்தாண்டு நிறைவேற்றியது.
இந்தப் புதிய சட்டத்தின் மூலம், விவசாயிகள் இடைத்தரகர்களை தவிர்த்து தங்களது பொருட்களை நேரடியாக விற்கலாம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடருமென்றும், விவசாயிகள் தங்கள் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்கலாம் என்றும் அரசு கூறியது. உள்ளூர் சந்தைகளைத்தவிர இதர இடங்களிலும் தங்கள் பொருட்களை விவசாயிகள் விற்கலாம். மின்-தேசிய வேளாண் சந்தை முறையும் சந்தைகளில் தொடரும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
ஆனால், இந்த வேளாண் சட்டங்கள் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் மற்றும் நில உரிமை பாதிக்கப்படும் என்று விவாசியகள் தெரிவித்தனர்.
இதையொட்டி, 2020 செப்டம்பர் 25ம் தேதி பஞ்சாப்,ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவாசாயிகள், டெல்லியை நோக்கிய பேரணியைத் (டெல்லி சலோ) தொடங்கினர். முதலில், ஹரியானா அரசு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், டெல்லிக்குள் விவசாயிகள் போரரட்டம் நடத்த டெல்லி அரசு அனுமதித்தது.
2020 டிசம்பர் 3ம் தேதியன்று, மத்திய அரசுக்கும், 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் புதுடெல்லியில் முதலாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று விவாசாயிகள் தெரிவித்தனர். சட்டத்திலும் பிரச்சனைக்குரிய விசயங்களை பேசித் தீர்த்திக் கொள்ளலாம் என்றும், சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் தலையீடு:
ஆறாவது பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், மூன்று வேளான் சட்டங்களை நிறுத்திவைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக 12.1.2021 தேதி ஆய்வுக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
வேளாண் விலை குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் அசோக் குலாடி, ஷெட்காரி சங்காதனா அமைப்பின் தலைவர் அனில் கன்வாத், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னால் தெற்காசிய இயக்குநர் டாக்டர் பிரமோத் ஜோஷி, அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் (ஏ.ஐ.கே.சி.சி) தற்போதைய தலைவர் பூபிந்தர் சிங் மான் ஆகியோர் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் செயல்படும் விவசாயிகள், விவசாயிகளின் அமைப்புகளுடன் இந்தக் குழு ஆலோசனை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது.
ஒத்திவைக்க முன்வந்த மத்திய அரசு:
இதற்கிடையே, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. 10-வது சுற்று பேச்சுவார்த்தையில், புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை வருட காலத்திற்கு ஒத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்தாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 26 இந்திய குடியரசுத் தினத்தன்று விவசாய அமைப்புகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதன்காரணமாக, மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.