பொருளாதாரத்தில் மாறி வரும் தேவைகளுக்கேற்ப ஸ்டேட் வங்கியைப் போன்று இந்தியாவுக்கு மேலும் நான்கு முதல் ஐந்து வங்கிகள் தேவைப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


மும்பையில் இன்று இந்திய வங்கிகள் சங்கத்தின் 74 வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்புரையாற்றினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டிற்கு சேவையாற்றி உயிரிழந்த வங்கிப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர் தனது உரையைத் தொடங்கினார். 


கொரோனாவிற்குப் பிந்தைய சூழலில்  மற்ற வளரும் நாடுகளை விட இந்தியாவில் வங்கிகளின் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம், வங்கி அமைப்பின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை சந்திக்க எஸ்பிஐ அளவிலான குறைந்தது நான்கு வங்கிகள் தேவை என்றும் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மாறிவருகிற தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அதற்காக ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகள் இந்தியாவுக்கு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்திய வங்கிகளின் டிஜிட்டல் மயமாக்கலின் காரணமாக  சிறு, நடுத்தர மற்றும் பெரிய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய அரசுக்கு பெருமளவில் உதவியது என்று  அவர் பாராட்டு தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கலை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டு பேசினார். அதற்காக இந்திய வங்கிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதையும் அவற்றின் வரையறைகள் இந்தியாவிற்கு மிகவும் தனித்துவமானதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார். 




பரபரப்பான பொருளாதார நடவடிக்கைகள் இருந்த  போதிலும், பல கிராமப்புறங்களில் இன்னும் வங்கி வசதிகள் இல்லை என்ற உண்மையை சுட்டிக்காட்டினார். அதுபோன்ற பகுதிகளில் வங்கிகளின் கிளைகள் உருவாக்க வேண்டும், அதேபோல வங்கிகளின் கிளைகள் இல்லாத இடங்களில், நிதி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் கட்டமைப்பின் மூலம் நடைபெறுவதை உறுதின் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 


கொரோனா காலத்தில் பல்வேறு வங்கிகளின் இணைப்பின் காரணமாக வங்கிப் பணியாளர்கள் பல சவால்களை எதிர்க்கொண்டதாக குறிப்பிட்டார். வங்கிகளின் ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை  என்பதை உறுதி செய்ததற்காக வங்கிப் பணியாளர்களைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.  தொடர்ந்து, வங்கிகளின் இணைப்பு எனும் அரசின் நடவடிக்கை வெற்றியடைய வங்கிப் பணியாளர்கள் உதவியதற்கு தனது பாராட்டினை தெரிவித்தார். கொரோனா காலத்தில் நாட்டில் தொலைதூர கிராமங்களில் இருப்பவர்களுக்கும்  உதவ வங்கிகள் முன்வந்ததையும் குறிப்பிட்டு பேசினார்.


இதையும் படிக்க:


நதிகள் தினம்... பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசிய திருவண்ணாமலை ஆறு.. அப்படி என்ன சிறப்பு?


Cyclone Gulab Landfall : இன்று கரையைக் கடக்கவுள்ள 'குலாப் புயல்'! தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. விவரம்!