கேரள மாநிலம் களமச்சேரியில் மாநாட்டு அரங்கின் ஒன்றில் ஜெபக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, குண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்ரா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் ஜெபக்கூட்டம் நடந்துள்ளது. யெகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர், ஜெபக்கூட்டத்தை நடத்தியுள்ளனர்.


கேரளாவை உலுக்கிய குண்டுவெடிப்பு:


இதில், மூன்று குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். 36 பேர் காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெபக்கூட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதால் உயிரிழப்பு அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது. பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த போது, அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாகவும் டிபன் பாக்சிஸ் குண்டுகள் எடுத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விரைந்துள்ளது. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து, தேசிய பாதுகாப்பு படை விசாரிக்க உள்ளது. இதுகுறித்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் கூறுகையில், "சம்பவ இடத்துக்கு வந்த பிறகு இது தொடர்பாக விசாரிக்க இன்றே சிறப்புக் குழுவை அமைக்க உள்ளேன்" என்றார்.


செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், குண்டுவெடிப்பு தொடர்பாக கூடுதல் தகவல்கள் ஏதேனும் இருக்கிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் இல்லை" என பதில் அளித்தார்.


நடந்தது என்ன?


தொடர்ந்து பேசிய அவர், "இன்று காலை 9:40 மணியளவில் ஜம்ரா சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடந்து குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்கள் மூத்த அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்தில் உள்ளனர். எங்கள் கூடுதல் டிஜிபியும், சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். 


நானும் விரைவில் சம்பவ இடத்தை அடைவேன். தீவிர விசாரணை நடத்தி, இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுப்போம். முதற்கட்ட விசாரணையில் IED குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் அதை விசாரித்து வருகிறோம்" என்றார்.


கேரளா முழுவதும் தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்க தேசிய புலனாய்வு முகமைக்கும் தேசிய பாதுகாப்பு படைக்கும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக கேரள அமைச்சர் வி.என். வாசவன் கூறுகையில், "பெண் ஒருவர் தீயில் சிக்கி இறந்தார், குண்டுவெடிப்பால் அல்ல. தொடர்ந்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாக முதற்கட்ட ஆய்வு கூறுகிறது. ஒருவர் மருத்துவமனையில் உள்ளார். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அசாதாரண விபத்து. அனைத்து ஏஜென்சிகளும் முதற்கட்ட விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்துள்ளன" என்றார்.