Kerala Kalamassery Blast News: ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில், அரங்கங்களில் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கேரள மாநிலம் களமச்சேரி(Kalamassery) பகுதியில் மாநாட்டு அரங்கின் ஒன்றில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, காலை 9.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.


பிரார்த்தனை கூட்டத்தில் நடந்தது என்ன?


இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 36 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுகிறது. காயம் அடைந்த 36 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீயில் எரிந்த உடல் ஒன்றை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. யெகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர், மாநாட்டு அரங்கில் பிரார்த்தனை மேற்கொண்டிருந்தபோது, பல முறை குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், காவல்துறை தரப்பு, இதை இன்னும் உறுதி செய்யவில்லை.


சம்பவ இடத்திற்கு, கேரள டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் செல்வார்கள் என கூறப்படுகிறது. ஜம்ரா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரார்த்தனை கூட்டத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அரங்கின் உள்ளே மூன்று குண்டுகள் வெடித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவித்துள்ளார்.


தயார் நிலையில் மருத்துவமனைகள்:


இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், "இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். டிஜிபி சம்பவ இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறார். நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். டிஜிபியிடம் பேசினேன். விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் கிடைக்கும்" என்றார்.


விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பும்படி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "களமச்சேரி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டேன். மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. களமச்சேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகளை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது" என்றார்.


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தலும் இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து மாநில தேர்தலும் நடத்தப்பட உள்ள நிலையில், கேரளாவில் நடந்த இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.