தொடரும் வி.வி.ஐ.பி. கலாசாரம்:


பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் வருகையின்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, வி.வி.ஐ.பி.க்களின் வருகையின் போது நிறுத்தப்படும் போக்குவரத்தால் பொது மக்களின் தினசரி வாழ்க்கை பெரிய அளவில் பாதிப்படைகிறது. 


இம்மாதிரியான வி.வி.ஐ.பி கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் காரை முதியவர் ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முதலமைச்சரின் இல்லத்திற்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் முதியவர் ஒருவர், சித்தராமையாவின் விருந்தாளிகளால் தன்னுடைய குடும்பத்தினர் பார்க்கிங் பிரச்னைகளை எதிர்கொள்வதாக புகார் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு காண கோரி, முதலமைச்சரின் காரை முதியவர் தடுத்தி நிறுத்தியுள்ளார்.


முதலமைச்சரை முற்றிகையிட்ட முதியவர்:


முதலமைச்சரின் காரை முற்றுகையிட்டு, முதியவர் நரோட்டம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். சித்தராமையாவை சந்திக்க வருபவர்கள், தங்களின் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால், தானும் தன்னுடைய குடும்பத்தினரும் வெளியேச் செல்ல சிரமப்படுவதாக புகார் கூறியுள்ளார்.


இதுகுறித்து நரோட்டம் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக இது என்ன முட்டாள்தனம்? நாங்கள் அலுத்துவிட்டோம்" என்றார். பார்க்கிங் பிரச்னை குறித்து அண்டை வீட்டாரின் புகாரை கேட்ட பிறகு, சித்தராமையா தனது வீட்டில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களை அழைத்துள்ளார். இந்த விஷயத்தை அவர்களிடம் கூறி, பார்க்கிங் பிரச்னையைத் தீர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.


சித்தராமையா இன்னும் தனது அதிகாரபூர்வ பங்களாவில் வசிக்கத் ஆரம்பிக்கவில்லை. இன்னும் தனது பழைய வீட்டில், அதாவது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில்தான் தொடர்ந்து வசித்து வருகிறார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாதான், முதலமைச்சர் வீட்டில் இன்னும் தங்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம், முதலமைச்சர் இல்லத்திற்கு சித்தராமையா மாறுவார் என கூறப்படுகிறது.


கர்நாடக தேர்தல்:


கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்து, ஆட்சி அமைத்தது. 136 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 66 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்றார்.


முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரை பாஜக இன்னும் நியமிக்கவில்லை. கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாகவே, எதிர்க்கட்சி தலைவரை பாஜக இன்னும் நியமிக்கவில்லை என கூறப்படுகிறது.