சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சில கட்சி எம்எல்ஏக்களுடன் இன்று காலை அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி சென்றுள்ளார். பாஜக எம்எல்ஏ சுஷாந்தா போர்கோஹைன் அவர்களை வரவேற்றார். அஸ்ஸாமுக்கு செல்வதற்கு முன்பு, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள விடுதியில் திங்கள்கிழமை காலை முதல் அவர்கள் தங்கியிருந்தனர்.
குவஹாத்தி விமான நிலையம் சென்றடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, தன்னிடம் 40 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். "பால் தாக்கரேவின் சிவ சேனாவிலிருந்து விலகவில்லை. விலகவும் மாட்டோம்" என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, சூரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது, சிவசேனா கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவிடம் தொலைபேசியில் உரையாடினார். இதையடுத்துதான், அவர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்றார்.
முடிவை பரிசீலனை செய்து கட்சிக்கு திரும்பும்படி, ஷிண்டேவை உத்தவ் கேட்டு கொண்டார். ஆனால், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து மாநிலத்தை ஒன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என ஷிண்டே பேசியதாகக் கூறப்படுகிறது. சிவசேனா தலைவர்களுடன் மோதலை தவிர்க்கவே அக்கட்சி எம்எல்ஏக்களை குவஹாத்திக்கு பாஜக இடம் மாற்றியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சூரத் விடுதியில் ஷிண்டே தங்கியிருந்தபோது, பல பாஜக தலைவர்கள் அவரை சந்தித்ததாகவும் அவர் மற்ற எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைவார் என்றும் தகவல் வெளியானது. கட்சியின் தலைமை கொறடா பதவியிலிருந்து அவர் செவ்வாய்கிழமை நீக்கப்பட்டார். இதற்கு பதிலடியாக, தனது ட்விட்டர் பக்கத்தில் சிவசேனை பற்றிய தகவல்களை அவர் நீக்கினார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாதி கூட்டணியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இதற்கு, மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த பாட்டில் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், ஷிண்டேவிடமிருந்து கோரிக்கை வந்தார் அது நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என விளக்கம் அளித்தார்.
மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், "இது சிவசேனாவில் உள்கட்சி பிரச்னை. மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கும் அரசில் உறுதியாக உள்ளோம்" என்றார். பாஜகவிடம் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததை தொடர்ந்து அங்கு அரசியல் நெருக்கடி தொடங்கியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்