குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். 


இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதியாகும். 




இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக டெல்லியில்  சரத் பவார் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் துணை தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த சின்ஹா வரும் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.


இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற உயர்மட்டக் குழு இன்று மாலை நடைபெற்றது.


முன்னதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் சந்தித்து பேசியதால் அவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. 






64 வயதான  ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினரான முர்மு 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். அவர் தனது அரசியல் பயணத்தை 1997 ஆம் ஆண்டு ராய்ரங்பூர்  பஞ்சாயத்தின் கவுன்சிலராகத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பாஜவின் பழங்குடியினர் மோர்ச்சாவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார் . இரண்டு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது  அமைச்சராக பதவி வகித்துள்ளார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்தால் சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான நீலகந்தா விருது அவருக்கு வழங்கப்பட்டது. பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநிலத்தின் 9வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்த ஜார்கண்ட் மாநில முதல் ஆளுநரும் இவர் தான். திரௌபதி முர்மு இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண