மமத மாற்றத்தை பற்றி பேசுவதற்கு பா.ஜ.க. அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் தகுதி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் அமைந்தகரையில் உள்ள தனியார் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்று பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
மதச்சார்பின்மை நாடு:
"நம் இந்திய பெரும் தேசம் என்பது பல்வேறு மொழி வழி மக்கள் ஒன்றிணைந்து இருக்கும் ஒரு தேசம். அனைவருக்கும் தெரிந்தது போல் நம் நாடு மதச்சார்பின்மை கொண்ட நாடு. ஆனால் கடந்த காலங்களில் மத அரசியல் செய்யும் கட்சிகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இப்போது ஆட்சி நடத்துபவர்களுக்கு மதம்தான் முக்கியம் அதைத் தவிர எதுவும் அவர்களுக்கு கவலை கிடையாது. இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது. அவர்களது ஆட்சி ஹிட்லரின் ஆட்சி போல் ஒரு கொடுங்கோல் ஆட்சியாய் உள்ளது.
குறிப்பாக இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அழித்து ஒழிப்பதை தான் நோக்கமாய் கொண்டுள்ளனர். ஒவ்வொரு தேர்தல் காலகட்டத்திலும் புட்கா, காஷ்மீர் பைல்ஸ் தற்போது கர்நாடக தேர்தல் வரும் சமயத்தில் கேரளா ஸ்டோரியை வைத்து சர்ச்சை செய்கின்றனர்.
திப்பு சுல்தான் ,மோடி யார் என்று நாம் ஒரு பார்வையை கொண்டிருக்க வேண்டும். விடுதலைக்காக போராடிய அனைவருமே தற்போது பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இருக்கின்றனர். அல்லது நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டுக்காக ஒரு போராட்டம் கூட செய்யாத ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக 20 மாநிலங்களின் சட்டமன்றத்தில் உள்ளது. இதை மறுத்து என்னுடன் தொலைக்காட்சியில் வாதாடிட தயாராக இருக்கிறீர்களா?
நாட்டுக்கே துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ்.:
ஒரு கொலைகாரர் சாவர்க்கரை வீர மனிதர் என பொய்யாக பட்டம் கட்டி போராட்டம் செய்து நமது நாட்டுக்கே பெரிய துரோகம் செய்த ஆர்எஸ்எஸ் அந்த ஒரு போராட்டம் மட்டுமே நடத்தினர்.
பயங்கரவாதம் என்பது வேறு தீவிரவாதம் என்பது வேறு. அதி பயங்கரவாதிகளிடம் இந்த நாடே சிக்கிக்கொண்டது. ஒரு கருத்தை தீவிரமாக வாதிப்பது விவாதிப்பது தீவிரவாதம். அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவரை அழித்து ஒழிப்பது பயங்கரவாதம் அதை தான் இப்போது பாஜக அரசு நடத்தி வருகிறது. மற்றவர்களை பயங்கரவாதிகள் என பட்டம் கட்டுவதை நிறுத்த வேண்டும்.
தகுதி கிடையாது:
கேரளாவில் இருக்கும் 32,000 பெண்கள் இளைஞர்களை மதம் மாற்றி வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தீவிரவாத பயிற்சிகளை அளித்து நம் நாட்டுக்கே திருப்ப வைப்பது அந்தப் படத்தை எடுத்த இயக்குனருக்கு தெரிகிறது. உளவுத்துறைக்கு தெரியாதா ? படம் வந்த பிறகு ஏன் குரல் கொடுக்க வேண்டும்? மதம் மாற்றத்தை பற்றி பேசுவதற்கு பாஜக அரசுக்கும், ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கும் தகுதி கிடையாது.
அந்தப் படத்தில் save your daughters என ஓர் வசனம் வருகிறது அதே தான் நானும் சொல்கிறேன், இந்த படத்தை பார்க்காமல் தடுத்து நம் மக்களை காப்பாற்றுவோம். பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட உயர்ந்தவன் தாழ்ந்தவன் என ஹிந்து மதம் மட்டுமே சொல்கிறது. அதை கடைப்பிடிப்பது ஹிந்து தர்மம் என சொல்கிறது. ஆகையினால் தான் எங்கோ அரேபியாவில் இருந்த இஸ்லாமிய மதம் இங்கு வரை பரவி உள்ளது”.
இவ்வாறு அவர் பேசினார்.