பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகளும் வேகம் எடுத்துள்ளது. கர்நாடக அரசு தேர்வு செய்த இடங்களில் இந்திய விமான நிலையங்களின் ஆணைய (ஏஏஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையத்தை ஒசூருக்கு மிக அருகில் அமைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
பெங்களூருவில் 2ஆவது விமான நிலையம்:
நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னையை பொறுத்தவரையில், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது. தென் இந்தியாவில் சென்னைக்கு அடுத்தப்படியாக முக்கிய நகரமாக கருதப்படும் பெங்களூருவிலும் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளது.
இதற்காக, சுடஹள்ளி, சோமனஹள்ளி, குனிகல், சிரா ஆகிய இடங்களை கர்நாடக அரசு தேர்வு செய்துள்ளது. இந்த இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது விமான நிலையம் அமைக்க சிராவே சிறந்து இடம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான டி.பி. ஜெயச்சந்திரா கூறியுள்ளார்.
போட்டா போட்டி!
இதற்கு மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சரும் துமகுரு தொகுதி எம்.பியுமான வி. சோமண்ணா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "துமகுரு மாவட்டத்தில் உள்ள சிராவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற ஜெயச்சந்திராவின் கூற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்.
இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக முப்பத்தி நான்கு எம்.எல்.ஏக்கள் எனக்கு ஒரு மனுவை அளித்தனர். ஜெயச்சந்திராவும் என்னிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். நான் அவற்றை விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் சமர்ப்பித்துள்ளேன்.
சுடஹள்ளி, சோமனஹள்ளி, குனிகலில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிராவில் விமான நிலையம் அமைக்க ஆதரவு தெரிவித்து, அவர்கள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சிரா எங்கு உள்ளது?
பெங்களூருவிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள சிரா, ரயில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை NH-48 மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய கர்நாடகா மற்றும் கிட்டூர் கர்நாடகாவிற்கான நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் தொழிற்சாலையும் உள்ளது.
இங்குதான், நரசபுரா தொழில் பேட்டை உள்ளது. ஜப்பானிய டவுன்ஷிப் வரவுள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்கத்தால் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. இங்கு, சர்வதேச விமான நிலையம் அமையும் பட்சத்தில் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிராவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஆதரவு பெருகினாலும், பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையத்தை ஒசூருக்கு மிக அருகில் அமைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.