2014-ஆம் ஆண்டு, 2019-ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து களம் இறங்கியுள்ளனர்.
முதல் கூட்டம்:
முதல் முறையாக கடந்த மாதம் 23 ஆம் தேதி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜிர்வால் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இரண்டாவது கூட்டம்:
இந்நிலையில் இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அது பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் நேற்றும் இன்றும் பெங்களூரில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முக்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஆம் ஆத்மி உள்பட 26 கட்சிகள் கலந்துக்கொண்டது.
மூன்றாவது கூட்டம் எங்கே?
இரண்டு நாள் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக இந்த எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு ‘ INDIA’ - இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்த தேதியில் மும்பையில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.