மதுபானத்தில் ஓட்கா, பிராந்தி, பீர், ஒயின், விஸ்கி, ரம், ஜின் என பல்வேறு வகைகள் இருக்கிறது. அதில் ஒரு வகையான, ஸ்காட்ச் விஸ்கி மால்ட் பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு பாரம்பரிய ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி செய்யப்படுகிறது.


ஸ்காட்ச் விஸ்கியை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடம்:


அதில், அதிக அளவில் ஸ்காட்ச் விஸ்கியை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்தில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் சென்றுள்ளது.


2021ஆம் ஆண்டை விட 2022ஆம் 60 சதவிகிதம் அதிக அளவு இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இந்தியாவில் கடந்த ஆண்டு, ஒரு வினாடிக்கு ஒப்பீட்டளவில் 53 பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு, 44 பாட்டில் இறக்குமதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஸ்காட்ச் விஸ்கி தயாரிப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஆண்டு பிரான்சின் 205 மில்லியனுடன் ஒப்பிடும்போது இந்தியா 219 மில்லியன் 70 சென்டிலிட்டர் ஸ்காட்ச் பாட்டில்களை இறக்குமதி செய்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்திய ஸ்காட்ச் சந்தையின் வளர்ச்சி 200 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது"


அதிக கட்டணத்தில் விற்கப்படும் ஸ்காட்ச் விஸ்கி:


இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) பேச்சுவார்த்தையில் பிரிட்டன் கவனம் செலுத்தும் முக்கிய துறைகளில் ஒன்றாக ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி உள்ளது. தற்போது, இந்தியா, பிரிட்டன் நாடுகள் ஏழாவது சுற்று சுதந்திர வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.


இதை மேற்கோள்காட்டிய ஸ்காட்ச் விஸ்கி தயாரிப்பு சங்கம், "இருப்பினும், இந்திய விஸ்கி சந்தையில் ஸ்காட்ச் விஸ்கியின் பங்கு குறைந்த அளவிலேயே உள்ளது. இதற்கு, ஸ்காட்ச் விஸ்கி அதிக கட்டணத்தில் விற்கப்படுவதே காரணம். இரட்டை இலக்க வளர்ச்சி இருந்தபோதிலும், ஸ்காட்ச் விஸ்கி இன்னும் இந்திய விஸ்கி சந்தையில் 2 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.


இந்தியாவில் ஸ்காட்ச் விஸ்கி மீதான 150 சதவீத கட்டணச் சுமையை பிரிட்டன்-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறைத்துள்ளது. இதன் காரணமாக, ஸ்காட்லாந்து விஸ்கி நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரிக்கக்கூடும். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதல் 1 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும்"


ஆசியா-பசிபிக் பிராந்தியம் சாதனை:


ஸ்காட்ச் ஏற்றுமதிக்கான இந்திய சந்தையின் மதிப்பு 282 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்காக உள்ளது. உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2021ஆம் ஆண்டு, 93 சதவீதம் அதிகரித்து பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் தைவானுக்குப் பின்னால் இருந்தது இந்தியா.


2022 ஆம் ஆண்டில், ஆசியா-பசிபிக் பிராந்தியம் ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) பின்னுக்கு தள்ளியது. தொழில்துறையின் மிகப்பெரிய பிராந்திய சந்தையாக உள்ளது. இந்தியாவைத் தவிர தைவான், சிங்கப்பூர் மற்றும் சீனாவில் இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது.