தனது தந்தை விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதால் குடும்ப பாரத்தை சுமப்பதற்காக பள்ளிச் சிறுவன் ஒருவன் காலையில் பள்ளிக்கூடம், மாலையில் ஜொமோட்டா டெலிவரி என இரட்டை அவதாரம் எடுத்துள்ளார். இணையதளம் முழுக்க அவரைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது.
7 வயது சிறுவன் தான் டெலிவரி பாயான கதையை விவரிக்கும் வீடியோவை ட்விட்டராட்டி ஒருவர் பகிர்ந்துள்ளார்.
ராகுல் மிட்டல் என்ற நபர் தான் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், ராகுலும் அந்தச் சிறுவனும் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த உரையாடலில் சிறுவனிடம் ராகுல் கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன், அப்பாவுக்கு விபத்து நடந்துவிட்டது. அதனால் நான் காலையில் பள்ளிக்குச் செல்கிறேன். மாலை நேரத்தில் 6 மணி முதல் அப்பா பார்த்துவந்த ஜொமோட்டோ வேலையைச் செய்கிறேன் எனக் கூறுகிறார். சிறுவனுக்கு சில சாக்கலேட்டுகளைக் கொடுத்து அனுப்புகிறார் ராகுல் மிட்டல்.
இந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்டதில் இருந்து இந்த செய்தி பதிவு செய்யப்பட்ட நேரம் வரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துள்ளது.
இணையவாசிகள் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். குழந்தை இந்த வயதில் கடினமாக உழைப்பது மிகவும் கவலையளிப்பதாகக் கூறியுள்ளார் ஒரு ட்விட்டராட்டி. இன்னும் சிலர் ஜொமோட்டோ தனது கார்ப்பரேட் கொள்கையை மாற்றிக் கொள்ளலாம் என்று கடிந்துள்ளனர். காயமடைந்த நபர் குணமடையும் வரை அவர் பணிக்கு ஆபத்து வராத வண்ணமும் ஏதேனும் குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும் விதமும் சட்ட திட்டங்களை மாற்றியமைக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு நபர், நான் இந்த வீடியோவைப் பார்த்தவுடன் அழுதுவிட்டேன். எத்தனை துணிச்சலான, கடின உழைப்பாளி இந்த குழந்தை. யாரேனும் அக்குழந்தையின் தொடர்பு எண்ணைப் பெற்றுத்தர முடியுமா? நான் அந்தச் சிறுவனின் கல்விக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இணையம் சமூகம் உண்மையிலேயே உச்சு கொட்டுவதைத் தாண்டியும் அவ்வப்போது ஏதேனும் நன்மைகளை செய்கிறது என்பதற்கு இந்த நபர் தெரிவித்துள்ள விருப்பமும் ஒரு அடையாளம் தான்.
அண்மையில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலானது. அதில் ஜொமாட்டோ டிஷர்ட் அணிந்து வீல்சேரில் டெலிவரி பையுடன் ஒரு நபர் டெலிவரி செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் வாழ்வதற்கு எதுவும் தடையல்ல என்பதற்கு இதுவே சான்று என்று கொண்டாடியிருந்தனர். தற்போது ஜொமோட்டோ டெலிவரி பாயான சிறுவனின் வீடியோ வைரலாகி இருக்கிறது.