மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பஞ்சாயத்து தலைவர் ஒருவரின் கணவர் தனது மனைவிக்கு பதிலாக பதவிப் பிரமாணம் எடுத்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாவட்ட அலுவலர்கள் இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கையை கோரியுள்ளனர்.


 






இந்த சம்பவம் தாமோ மாவட்டத்தின் கைசாபாத் பஞ்சாயத்தில் நடைபெற்றுள்ளது. பஞ்சாயத்து அளவில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சில பெண்கள் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றனர்.


எனினும், பதவிப் பிரமாணத்தின் போது பெண்களுக்குப் பதிலாக அவர்களது கணவர்கள் வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, பதவியேற்பு விழா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாத்து தலைவர் மற்றும் பிற பெண்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைக்கவே கிராம பஞ்சாயத்து சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


எவ்வாறாயினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களது கணவர்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலைப்படுத்த அனுமதித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பதவி பிரமாண நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பெண் பிரிதிநிதிகள் கலந்து கொள்ள கூட வில்லை எனக் கூறப்படுகிறது.


குற்றச்சாட்டுகள் வலுத்ததையடுத்து, உண்மை நிலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. செய்தியாளர்களிடம் பேசிய டாமோ பஞ்சாயத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO) அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்த சம்பவம் விதிகளுக்கு எதிரானது என்றும், இந்த விவகாரம் பரிசீலிக்கப்பட்ட பிறகு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


"தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவிகளுக்குப் பதிலாக சில ஆண்கள் சத்தியப்பிரமாணம் செய்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து விரிவான அறிக்கைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வெளிவந்தவுடன், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பஞ்சாயத்து செயலர் தண்டிக்கப்படுவார்" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழ்நாட்டில் பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்கள் மற்றும் உறவினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக பெண் கவுன்சிலர்களை அழைத்து உறவினர்களின் தலையீடு இல்லாமல் நிர்வாகம் செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண