உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு வரும் பல வழக்குகளில் சிலவற்றில் வரும் தீர்ப்புகள் பலரின் கவனத்தையும் ஈர்க்கும். ஏனென்றால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை இந்தியாவிலுள்ள எந்த ஒரு நீதிமன்றத்திலும் பிற வழக்குகளில் சுட்டிக்காட்ட முடியும். இதன் காரணமாக இந்தியா முழுவதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் கவனிக்கப்படும் வகையில் அமைந்திருக்கும். அந்தவகையில் நேற்று உச்சநீதிமன்றம் ஒரு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அரசால் கொடுக்கப்பட்ட நிலத்தை விற்க முயன்றுள்ளார். அரசால் பட்டியலின நிலமற்ற மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மற்றொரு பட்டியலினத்தவருக்கு மட்டும் தான் விற்கமுடியும். இதற்காக இந்த நபர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கிய கடனுக்காக இந்த நிலத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் ஒருவருக்கு விற்றுள்ளார். இந்த நிலம் விற்பனை தொடர்பாக பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அந்த வழக்கில் ராஜஸ்மாநில உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதில், “பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் பஞ்சாப் மாநிலத்தில் இந்த சலுகையை பயன்படுத்தி பட்டியலனித்தவருக்கான நிலத்தை வாங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பாரத் ராம் என்ற அந்த பஞ்சாப் நபர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஏ.எஸ்.போப்பண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் ஒரு தீர்ப்பை வழங்கினர். அதன்படி, “1994ஆம் ஆண்டு எஸ்சி எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கும் மகாராஷ்டிரா குழு vs மத்திய அரசு(Action Committee on Issue of Caste Certificate to Scheduled Castes and Scheduled Tribes in the State of Maharashtra Vs. Union of India and others 1994 ) என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஒரு மாநிலத்தில் வசிக்கும் பட்டியலின பிரிவை சேர்ந்தவர் மற்றொரு மாநிலத்தில் பட்டியலினத்தவருக்கான சலுகையை பயன்படுத்த முடியாது” எனத் தெரிவித்தனர்.
1994-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில், ”ஒரு மாநிலத்தில் இருக்கும் சமூதாய நிலை மற்றொரு மாநிலத்தில் ஒன்றாக இருக்கும் எனக் கூற முடியாது. ஆகவே ஒரு சமூகத்தை இந்தியா முழுவதும் பட்டியலின சாதியாக கருதமுடியாது” எனக் கூறியிருந்தது. மேலும் இதே வழக்கில் நியமிக்கப்பட்ட குழுவும், “ஒரு மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருக்கும் நபர் தன்னுடைய படிப்பு மற்றும் வேலை காரணங்களுக்காக மற்றொரு மாநிலத்திற்கு சென்றால் அங்கு அவர் பட்டியலினத்தவராக கருதப்படமாட்டார்” எனக் கூறப்பட்டிருந்தது. அதாவது அந்த நபர் குடிபெயர்ந்த மாநிலத்தில் உள்ள பட்டியலின வகுப்புகளின் பட்டியலின்படியே அவருடைய சாதி சலுகைகள் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கனவு.. ராணுவ வீரரின் வீடியோவை பகிர்ந்து நெகிழ்ந்த ஆர்யா...