புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க கோரி வழக்கறிஞர் சுகின் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கூறி,  ஜெ.கே.மகேஷ்வரி, பி.எஸ்.நரசிஹா அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும் கட்டடம் திறப்பதையும் எப்படி தொடர்பு படுத்த முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 


முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் நேற்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டு  கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 


நாட்டின் முதல் குடிமகன் என்பதால் புதிய நாடாளுமன்ற கட்டத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டவர்களும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.  ஆனால் எதிர்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மேலும் 19 எதிர்கட்சிகள் நாடாளுமன்றம் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக நேற்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. 


இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேட்டியளித்தார்.  1947-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார பரிமாற்றம் நடந்ததை குறிப்பிடும் வகையில் பிரதமர் நேருவிடம் தமிழக செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படும்’ என்று தெரிவித்தார்.  மேலும் புதிய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை சின்னமாக தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார் என்றார். அந்த செங்கோல் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தார். 


மேலும் படிக்க 


Senthil Balaji: ஐ.டி.ரெய்டு.. தொண்டர்களால் கடுப்பான அதிகாரிகள்.. விளக்கம் கொடுத்த செந்தில் பாலாஜி ..!


WhatsApp Feature : இனி Whatsapp-க்கு மொபைல் நம்பர் தேவையில்லையா? இந்த பெயரே போதுமா? அப்டேட் இதுதான்..