காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடையே தான் அதிகம் விவாகரத்து நிகழ்வதாக உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


விவகாரத்து:


உச்சநீதிமன்றத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தொடர்பான வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள்  பி. ஆர். காவை, சஞ்சய் கரோல் அமர்வு விசாரித்தது. அப்போது, காதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து கேட்டு வந்திருப்பது தெரிய வந்தவுடன், ''காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தான் அதிக அளவில் விவாகரத்தும் பெறுவதாக'' நீதிபதி காவை தெரிவித்தார்.


காதல் திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் செய்ய நீதிமன்றம் முயற்சித்தது. ஆனால், கணவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில்  சமீபத்தில் நீதிமன்றம் உடனடி விவாகரத்து வழங்கலாம், ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு விவகாரத்து வழங்கப்பட்டது.


காதல் திருமணத்தில் மனகசப்பு


காதல் திருமணங்களில் அதிக மனக்கசப்பு, சகிப்பின்மை ஏற்படுவதாக நாம் சமூக வலைதளங்களில் பெரும்பாலான கருத்துக்களை பார்க்க முடிகிறது. 5 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கூட திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளில் பிரிந்து விடுகின்றனர் என்ற செய்திகளை பார்க்க முடிகிறது. இன்னும் ஒரு சில தம்பதிகளோ ஓரிரு மாதங்களில் பிரிந்து விடுகின்றனர். பொதுவாக விவாகரத்துக்கு பல்வேறு வகையான காரணங்கள் சொல்லப்பட்டாலும், காதல் திருமணமான தம்பதிகளின் விவகாரத்து கவனிக்கத்தக்கதாக உள்ளது.


பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் மணவாழ்வில் வரும் பிரச்சனைகளை அனுசரித்து செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் அப்படி சகித்துக் கொள்ள தயாராக இருப்பதில்லை. இதற்கு காரணம், நீயா நானா என்ற ஈகோ தான். ஆம் கணவன் - மனைவி இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றாலும் அத்தம்பதியின் மண வாழ்க்கை சுமூகமாக செல்கின்றது. இல்லாத பட்சத்தில் ஒரு சிறிய பிரச்சனை விவாகரத்து வரை கொண்டு சென்று விட்டு விடுகின்றது.


விட்டுக்கொடுத்தல் அவசியம்:


காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணமாக இருந்தாலும் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகியவை இல்லாவிட்டால் விவாகரத்துகள் சகஜமாக நடப்பதாக மன நல மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆடம்பரம், ஒழுக்கமின்மை ஆகியவையும் கூட தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இரு வேறு சூழல்களில் வளர்ந்த இருவர் ஒரே சூழலில் வாழ நேரிடும் போது, ஒருவர் மற்றொருவரிடமிருந்து நிறை குறைகளை உணரலாம். ஆரம்ப காலத்தில் இவை பெரிதாக தெரிந்தாலும் நாட்கள் போக போக இவை பழகி விடும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பிரச்சனைகள் மிக சாதாரணமானதாக இருக்கும் போது அவற்றை பேசி தீர்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.