சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் ஜாமீன் மறுத்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடாது என வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளார்.
சாத்தான்குளம் கொலை: என்ன நடந்தது?
முன்னதாக, 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி சாத்தான்குளம் காவல்துறையினர் விதிமுறைகளை மீறி கடை திறந்ததாக தந்தை மகன் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அவர்கள், ஜெயராஜும் பென்னிக்ஸும்.அப்போது ஜெயராஜின் குடும்பத்தினருக்கு தெரியாது மீண்டும் அவர்கள் உயிரோடு வரமாட்டார்கள் என்று. ஜெயராஜின் மனைவி செல்வராணியின் வாழ்க்கையை திருப்பி போட்ட சம்பவமானது அது.
கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜும் பென்னிக்ஸும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் கடும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜெயராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் ஜூன் 22 ஆம் தேதி உயிரிழக்க மறு தினம் ஜுன் 23 ஆம் தேதி பென்னிக்ஸும் உயிரிழந்தார்.இந்த சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொரோனா கால சமூக இடைவெளியை ஒதுக்கி விட்டு தமிழகமே போராட்டத்தில் ஈடுபட்டது.
சாத்தான்குளம் சம்பவத்தில் கணவன் மற்றும் மகனை இழந்த செல்வராணி துடித்து போனார்.தனது கணவன் மகன் அன்பினால் கட்டுண்டு இருந்தவருக்கு கானல் நீரானது வாழ்க்கை. தனது கணவனும் மகனும் வாழ்ந்த வீட்டில் குடியிருக்க இயலாமல் தவித்த செல்வராணி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனது மகள் பெர்சிஸ் வீட்டில் வாழ துவங்கினார்.
தனது குடும்பத்தினருடன் பெர்சிஸ் விஜயாவாடாவில் வசித்து வந்தார். தனது தந்தை மகன் உயிரிழப்பை தொடர்ந்து தமிழக அரசு அளித்த வேலைவாய்ப்பை தொடர்ந்து தற்போது புளியங்குடியில் தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.ஓராண்டு ஒருயுகமாக கழிந்து கணவர், அன்பு மகனின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து உள்ளார் ஜெயராஜின் மனைவி.
தனது தம்பி பென்னிக்ஸ் தினந்தோறும் தனது குழந்தைகளிடம் தொலைபேசியில் பேசி விடுவார் என்பதை நினைவு கூறும் பென்னிக்ஸ் சகோதரி பெர்சிஸ், தனது சகோதரன் அன்றைய தினமும் கூப்பிட்டான், ஆனால் அன்றைய அழைப்பை ஏற்கவில்லை என மனம் வெம்புகிறார்.
வழக்கம்போல் கூப்பிடுவதாக நினைத்தே அழைப்பை ஏற்காததை நினைத்து இப்போதும் வருந்துவதாக கூறும் இவர் ஒருவேளை காவல்நிலையம் செல்வது தொடர்பாக தெரிவிக்கவே பென்னிக்ஸ் தன்னை அழைத்து இருக்கலாம், மாபெரும் தவறு செய்து விட்டதாக தினமும் கண்ணீர் வடிக்கும் பெர்சிஸ், தனது குழந்தைகள் மாமா எப்போது வருவார் சாக்லேட் வாங்கி தருவார் என கேட்கும் போதெல்லாம் பதில் சொல்ல முடியாமல் கண்கள் கசிய வாய்மூடி மவுனம் காப்பதாக சொல்கிறார்.
தனது தந்தை மற்றும் சகோதரனை கொலை செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும், இருவரின் இறப்புக்கும் நல்ல நீதி கிடைக்க வேண்டும் என்கின்றனர் ஜெயராஜ் குடும்பத்தினர்.