சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், விரைவான நகரமயமாக்கல் காரணமாக கட்டுமானங்கள் மற்றும் கட்டட செயல்பாடுகளில் இருந்து மட்டும் ஒட்டுமொத்தமாக 231.9 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு (Co2) வெளியாகும் எனக் கணித்துள்ளனர்.


கட்டடங்களின் செயல்பாட்டுத் தேவைகளுக்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு (Renewable sources of energy) மாறினால் சென்னையில் கார்பன் உமிழ்வு குறையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


ஐஐடி மெட்ராஸ்-ன் டெக்னாலஜிஸ் ஃபார் லோ கார்பன் அண்ட் லீன் கன்ஸ்ட்ரக்சன் மையமும் (Centre for Technologies for Low Carbon and Lean Construction), ஐஐடி மெட்ராஸ் கட்டட பொறியியல் துறை பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் போக்ராஜ் நாயக் ஆகியோர் அடங்கிய ஐஐடி மெட்ராஸ்-ன் இந்தோ ஜெர்மன் சென்டர் ஃபார் சஸ்டெய்னபிலிட்டி (Indo-German Centre for Sustainability (IGCS) மையம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.


இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த ஐஐடி மெட்ராஸ்-ன் கட்டட பொறியியல் துறை பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், "கார்பன் உமிழ்வைப் பொறுத்தவரை நமது இலக்கை அடைய வேண்டுமெனில், எதிர்காலத்தில் கார்பன் உமிழ்வு வழக்கமாக எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என அளவுகோல் நிர்ணயித்து அதன்படி செயலாற்ற வேண்டியது அவசியம். நாங்கள் மேற்கொண்ட ஆய்வு இந்த சிக்கலுக்குத் தீர்வுகாண்பதில் ஒரு படியாக விளங்குகிறது" எனக் குறிப்பிட்டார்.


விரைவான நகரமயமாக்கல் காரணமாக நாடு முழுவதும் கட்டுமானப் பொருட்கள் கையிருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கார்பன் வெளியேற்றத்திற்கு நான்கில் ஒரு பகுதி கட்டடத் தொழில்தான் காரணம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.


மூலப் பொருட்களைத் (சிமெண்ட், எஃகு போன்றவை) உற்பத்தி செய்தல், அவற்றை கட்டுமானப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து, குறிப்பாக கட்டுமானப் பணிகளின் போது பயன்படுத்தப்படும் ஆற்றல் ஆகியவற்றால் அதிகளவில் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது.


கட்டடங்கள் கட்டுவதால் அதிகரிக்கும் கார்பன் உமிழ்வுப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் ஆய்வு ஒன்றை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.


ஆராய்ச்சியாளர்கள் மூன்று கட்டங்களாக மேற்கொண்ட ஆய்வு விவரம் வருமாறு:


2040ம் ஆண்டில் சென்னை எப்படி இருக்கும் என்பதை உருவகப்படுத்த ஜியோ ஸ்பேசியல் எனப்படும் புவி-இடம் சார்ந்த மாடலிங் தொழில்நுட்பங்களை (Geo-spatial modeling techniques) இக்குழுவினர் பயன்படுத்தினர்.
நகரமயமாக்கல் காரணமாக சென்னையில் கார்பன் வெளியேற்றத்தின் அளவை அறிய வாழ்க்கைச் சுழற்சி பகுப்பாய்வு (Life Cycle Analysis - LCA) நுட்பங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.


கார்பன் உமிழ்வை மிகப்பெரிய அளவில் குறைக்க வழிவகுக்கும் தொழில்நுட்பங்களை மதிப்பிடுவதற்காக, சென்னை நகரின் வளர்ச்சியில் மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் மற்றும் ஆற்றல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்த பல்வேறு காட்சியமைப்புகளை இக்குழுவினர் உருவாக்கினர்.


2040இல் சென்னை வரைபடம்:


ஆய்வின் முதல்கட்டமாக, தி நேச்சர் கன்சர்வன்சி (The Nature Conservancy) என்ற உலகளாவிய சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பால் உருவாக்கப்பட்ட புவிஇடம் சார்ந்த (geo-spatial) நில மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். கடந்தகாலப் போக்குகள் மற்றும் எதிர்காலத் தடைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2040-ல் சென்னையின் எதிர்கால வரைபடத்தைத் தயாரிக்க 'உருவகப்படுத்தும் நுட்பங்களை'ப் பயன்படுத்தினர்.


நகர்ப்புற கட்டமைப்புப் பகுதிகள் அதிகரிப்பதும், நீர் மற்றும் சதுப்புநிலங்கள் குறைந்துகொண்டே வருவதும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு உள்ள மாதிரியில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. 2019 முதல் 2040-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நில அமைப்புகளில் ஏற்படும் மாற்றத்தை கீழே உள்ள வரைபடம் விளக்குகிறது.


அதிகரித்துவரும் கார்பன் உமிழ்வுகள்


கட்டடங்கள் இடிப்பு, கட்டுமானம் (பொருட்களைக் கொண்டு செல்லுதல், கட்டுமானப் பணிகள்), கட்டட செயல்பாடுகள் ஆகியவற்றால் வெளியாகும் கார்பன் அளவை வாழ்க்கைச் சுழற்சி பகுப்பாய்வைப் (Life Cycle Analysis) பயன்படுத்தி ஆய்வுக் குழுவினர் மதிப்பீடு செய்துள்ளனர்.


கட்டடங்களைக் கட்டும் போதும், அவற்றின் செயல்பாடுகளின் போதும் பயன்படுத்தப்படும் ஆற்றல் காரணமாக சென்னையில் 231 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் உமிழ்வு இருக்கும் என கணக்கீடுகள் சுட்டிக் காட்டுகின்றன.


கார்பன் உமிழ்வைக் குறைப்பது எப்படி?


மூன்று நடவடிக்கைகள் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியும் என ஆய்வுக் குழுவினர் பரிந்துரைத்து உள்ளனர்.


பாரம்பரிய சிமெண்ட்டை குறைந்த கார்பன் கொண்ட சிமெண்ட்டாக மாற்றுதல்


கட்டடங்களை இடிக்கும் போது ஏற்படும் கழிவுகளை எதிர்காலக் கட்டுமானத்தில் மீண்டும் பயன்படுத்துதல்


இயங்கி வரும் கட்டடங்களின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு மாறுதல்


ஆற்றல் ஆதாரங்களை மாற்றுவதன் மூலம்தான் கார்பன் உமிழ்வை மிகப் பெரிய அளவில் மாற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.


ஒரு கட்டடத்தின் செயல்பாட்டு ஆற்றல் தேவையில் 50% தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தினால் 2019ல் இருந்து 2040ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்தமாக 115 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் உமிழ்வு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்க பாரம்பரிய சிமெண்ட்டுக்கு பதிலாக 'கார்பன் குறைந்த' சிமெண்ட்டைப் பயன்படுத்தியபோது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது.