காங்கிரஸ் கட்சித் தலைவர் சாம் பிட்ரோடா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை சர்ச்சைக்குரிய வகையில் ஒப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
என்ன பேசினார் சாம் பிட்ரோடா?
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சாம் பிட்ரோடா. இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலானது. அதில் பேசிய அவர், “ கிழக்கு இந்தியாவில் வசிப்பவர்களை சீனர்களை போலவும், மேற்கில் வசிப்பவர்கள் அரேபியர்களை போலவும், வட இந்தியாவில் வசிப்பவர்கள் வெள்ளையர்களை போலவும், தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் ஆப்பிரிக்க மக்களை போலவும் இருக்கிறார்கள். ஆனால், இது முக்கியமில்லை. இதன்மூலம், இந்தியா மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக உள்ளது. நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழ்கிறோம். பல்வேறு மொழிகள், மதங்கள், பழக்க வழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம். நான் நம்பும் இதே இந்தியாவில்தான், எல்லாரும் மதிக்கப்படுகிறார்கள், எல்லோரும் சமரசம் செய்து கொள்கிறார்கள்.” என்றார்.
பரம்பரை வரி:
அப்போது தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தால், கணக்கெடுப்பு நடத்தி, யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பது கண்டறியப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தாரே, அதை பற்றி என்று சாம் பிட்ரோடாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அமெரிக்காவில் பரம்பரை வரி என்று உண்டு. ஒருவருக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொந்து இருந்தால், அவர் இறந்த பிறகு, 45 சதவீத சொத்து அவரது குழந்தைகளுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில் 55 சதவீத சொத்து அரசாங்கத்திற்கு சொந்தமானது.
ஆனால், இந்தியாவில் அப்படி ஒரு சட்டம் இல்லை. இங்கு ஒருவருக்கு 10 பில்லியன் சொத்து இருந்தால், அவரது மரணத்திற்கு பிறகு, அவரது குழந்தைகள் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பெறுகிறார்கள். இந்த அரசிற்கும், பொதுமக்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை மக்கள் விவாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த விவாதத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் புதிய கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களை பற்றி பேசுகிறோம், இது மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும். பணக்காரர்களின் நலனுக்காக மட்டுமே இருக்கக்கூடாது” என்றார்.
யார் இந்த சாம் பிட்ரோடா?
சாம் பிட்ரோடாவின் முழுப்பெயர் சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா. இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1942ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள டிட்டிலாகரில் குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தில் ஏழு சகோதர, சகோதரிகள் உள்ள நிலையில், இவர் அதில் மூன்றாவதாக பிறந்தவர்.
குஜராத்தில் உள்ள பள்ளியில் பள்ளியை முடித்த இவர், வதோதராவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் மின்னணிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கடந்த 1964ம் ஆண்டு மேற்படிப்புக்கான அமெரிக்கா சென்ற சாம் பிட்ரோடா, சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, அங்கேயே குடியுரிமையையும் பெற்றார்.
பிட்ரோடாவின் குடும்பம் ஒரு காந்தியவாதி குடும்பம். எனவே, இவரும் காங்கிரசுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது. கடந்த 1984ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சாம் பிட்ரோடாவை இந்தியா திரும்ப சொன்னார். இந்திரா காந்தியின் வற்புறுத்தலின் பேரில் சாம் பிட்ரோடா, இந்தியா திரும்பி அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.
இந்தியாவுக்கு திரும்பிய பிறகு, 1984ம் ஆண்டிலேயே, டெலிகாமில் பணிபுரியும் தன்னாட்சி அமைப்பான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தை தொடங்கினார். இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானபோது, பிட்ரோரா அவரது ஆலோசகரானார். அன்று முதல் இன்று வரை காங்கிரஸில் பல்வேறு அமைப்புகளில் தலைவராக பதிவு வகித்து வருகிறார்.