Air India Flight: ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்கள் பலர் திடீர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி, விடுப்பு எடுத்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு:


இந்தியாவில் விமானப் பயணிகளின் பிரச்சனைகள் என்பது முடிவில்லாத நெடுந்தொடராகவே உள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் விஸ்தாரா நிறுவனம் ஒரே நேரத்தில் ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்தது.  இந்நிலையில், செவ்வாய் இரவு முதல் புதன்கிழமை காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், தனது 70க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது.  விமானத்தின் மூத்த பணியாளர்கள் திடீரென உடல்நலக் குறைவை காரணம் காட்டி விடுப்பு எடுத்ததை அடுத்து, சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.






காரணம் என்ன?


இது குறித்து சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலளித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் செய்தித் தொடர்பாளர், “எங்கள் ஊழியர்களின் ஒரு பகுதியினர் கடைசி நிமிடத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அறிவித்துள்ளனர். நேற்றிரவு தொடங்கி, விமானம் தாமதம் மற்றும் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், எங்களது பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களைக் குறைக்க எங்கள் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.






பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள்?


பயணிகளின் அசவுகரியத்திற்கு மன்னிப்புக் கோருகிறோம். ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் விமான நிறுவனத்திடமிருந்து முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவார்கள் அல்லது கூடுதல் கட்டணம் ஏதுமின்றி தங்கள் விமானத்தை மாற்றியமைக்க அனுமதிக்கப்படுவார்கள். புதன்கிழமை தங்களது சேவை மூலம் பயணிக்க உள்ள பயணிகள், விமான நிலையம் வருவதற்கு முன்பு கஸ்டமர் கேரை தொடர்பு கொள்வது நல்லது” என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடயே, நிறுவனத்தின் நிர்வாகக் கோளாறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.