மும்பையில் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டில் புகுந்து, அவரை கத்தியால் குத்திய நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரை தவிர, பல சந்தேக நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறை விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகராக வலம் வரும் சைஃப் அலிகான், நடிகை கரீனா கபூரின் கணவர் ஆவார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான தேவாரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மும்பை பாந்த்ராவில் உள்ள சொகுசு பங்களாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
ரயில் நிலையத்தில் நோட்டமிட்ட மர்ம நபர்:
புதன்கிழமை நள்ளிரவு, இவரது வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர் ஒருவர், இவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், சைஃப் அலிகானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்றே தகவல் வெளியிட்டன.
பலத்த பாதுகாப்பை மீறியும் பிரபல நடிகரின் வீட்டில் கொள்ளையர் ஒருவர் எப்படி நுழைய முடியும் என பலர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். சைஃப் அலிகானின் வீட்டில் பணிபுரியும் நபர் ஒருவரின் உதவி இல்லாமல் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என பலர் கூறி வருகின்றனர்.
மும்பை போலீஸ் அதிரடி:
இந்த நிலையில், சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை அந்த நபர் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. சொல்லபோனால், சைஃப் அலிகானின் வீட்டிற்குள் புகுந்து தாக்கிய அதே நபர் அவர்தானா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. நேற்று சம்பவம் நடந்த பின்னர் சந்தேக நபர் பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு அருகில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
தன்னை கண்டுபிடித்துவிடாமல் இருப்பதற்காக உடைகளை மாற்றிக் கொண்டதாக போலீசார் கருதுகின்றனர். போலீசார் 20 குழுக்களை அமைத்து, தொழில்நுட்ப தரவுகளை சேகரித்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க இன்பார்மர்களை பயன்படுத்தி வருகின்றனர். அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக பலரை அழைத்து காவல்துறை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.