உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் மகரஜோதி தரிசனத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெற்றது. பந்தர ராஜவம்சத்தினர் தலைமையில் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பந்தளம் வலியகோயிக்கல் பகுதியில் இருந்து திருவாபரணங்கள் எனப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.
திருவாபரண ஊர்வலம் பம்பையை நெருங்கிய நேரத்தில் சபரிமலையில் மகர சங்கிரம பூஜை நடத்தப்பட்டது. திருவாபரண ஊர்வலத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் இதுவும் ஒன்று. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்ற நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த பூஜை நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையான கவடியாரில் இருந்து கொண்டு வரப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இந்த திருவாபரணங்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, திருவாபரணங்கள் பதினெட்டாம்படி வழியாக கொண்டு செல்லப்பட்டது. திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், நடை அடைக்கப்பட்டு அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலை நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கார தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் சரியாக மாலை 6.51 மணிக்கு காட்சி தந்தது. தொடர்ந்து மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.
மகரஜோதியை தரிசிப்பதற்காக 8 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது, பக்தர்கள் சரணம் ஐயப்பா, சரணம் ஐயப்பா என்று எழுப்பி பக்திகோஷம் விண்ணை பிளந்தது. மகரஜோதியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடப்பாண்டில் மகரஜோதி தரிசனத்திற்கு தினசரி 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருவாபரண ஊர்வலத்தில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களின் வசதிக்காக ஜோதி தரிசனத்தை காண்பதற்காக எட்டு இடங்களில் இருந்தும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
ஐயப்பனுக்கு வரும் 18-ந் தேதி வரை நெய் அபிஷேகம் நடைெபுறும். வரும் 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிவடைந்த பிறகும், 20-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இத்துடன் இந்தாண்டிற்கான மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்