இந்தியாவின் சிறந்த தொழில் அதிபர்களில்  ஒருவரான டாடா சன்ஸ் தலைவரான ரத்தன் டாடா, தனது சமூக வலை தளத்தில் அமெரிக்கவின் பெரிய இசை கலைஞரான ஸ்லாஷ் உடன் தான் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்து உள்ளார்.


லாஸ் ஏஞ்சல்ஸில் ஸ்லாஷ் உடனான தனது சந்திப்பை நினைவுகூர்ந்த ரத்தன் டாடா, இந்த அரிய படத்தை இன்று ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள டாடா, "எனது விற்பனை நிலையங்களில் ஒன்றான கல்பின் ஜாகுவார் கார் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அப்போது ஜாகுவார் XKR காரை டெலிவரி செய்து கொண்டிருந்த இசை கலைஞர் ஸ்லாஷ் -ஐ கண்டேன். இவரை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ராக்ஸ்டார் ஸ்லாஷ் மிகவும் கண்ணியமானவர்" என்று பதிவிட்டுள்ளார் ரத்தன் டாடா.


 






ரத்தன் டாடா ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புப் படித்து விட்டு ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றியவர். ஹர்வர்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய அவர், தனது குடும்ப வணிகத்தில் இறங்கினார். 31 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்குப் பிறகு, 1991ஆம் ஆண்டில் டாடா குழுத்தின் 3 வது தலைவரானார். ரத்தன் டாடா தலைவரான பிறகு டாடா குழுமம் அசுர வளர்ச்சி அடைந்தது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் குடிநீர், உப்பு, டீ, இரும்பு, தாது, தங்க நகைகள், கைக்கடிகாரம், கார், விமானம் என பிரம்மாண்ட பிசினஸை விரிவுபடுத்தினார்.


உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தாலும் மிகவும் எளிமையானவர். அனைத்து முன்னனி கார் நிறுவனங்களும் கோடிகளில் கார்களைத் தயாரித்துக்கொண்டிருக்க, மாற்றுத் திசையில் பயணித்தார் டாடா. சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது. தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் என பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி சாலைகளில் நானோவை வலம்வர வித்திட்டார் ரத்தன் டாடா.