எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் தஞ்சை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாக இயங்க உள்ளது.
சபரிமலைக்கு மிக அருகே இருக்கும் புனலூர் இரயில் நிலையம் வழியாக முதன்முறையாக ஒரு சிறப்பு இயக்கப்படவுள்ளது. சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐயப்ப சுவாமிகளுக்கு வசதியாக ஐயப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான "புனலூர் வழியாக" அகல இரயில் பாதை மாற்றத்திற்குப் பிறகு முதன்முறை ஆக இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் தாம்பரத்திலிருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் மாநகர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை , "புனலூர் (சபரிமலை)", கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் (கொச்சி) வரை இயக்கப்பட உள்ளது.
2022 நவம்பர் 28-ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி 2023 வரை திங்கள்தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்தோறும் தாம்பரத்திலிருந்தும் ஆறு சேவைகள் இயங்கும். அதன்படி, இரண்டுக்கு குளிர்சாதன பெட்டி - 1, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி - 2, படுக்கை வசதி பெட்டிகள் - 7, பொது பெட்டிகள் - 2, மாற்று திறனாளிகள் பொது பெட்டிகள் - 2 என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன
இந்தச் சிறப்பு ரயிலுக்கு புனலூர் ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக கேரள அரசின் சிறப்புப்பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டு உள்ளனர். பழைய 100 ஆண்டுகள் பாரம்பரிய சபரிமலை ரயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் இரயில் வழித்தடத்தை பயன்படுத்தி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்பழா ஆகிய ஐயப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி யாத்திரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை:
கேரள மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வருவது வழக்கம். சபரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும், கொரோனா பரவல் மற்றும கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சபரிமலை கோயிலில் மண்டல பூஜைக்காக பக்தர்கள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மழை, பணி என எதையும் பொருட்படுத்தாமல் நீண்டு வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி, ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 8 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது