புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2023 ஆம் ஆண்டில் நடை திறந்திருக்கும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம் 


கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு  நடை திறக்கப்பட்டது.  கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த முறை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வருகின்றனர். ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம்  கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 


மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. மகரஜோதி தரிசனத்தை காண நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஜனவரி 14 ஆம் தேதி வரையிலான ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டது. ஜனவரி 12 ஆம் தேதி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜனவரி 14 ஆம் தேதி சபரிமலை வந்தடைகிறது. அன்றைய தினம் இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும். 


அதன்பிறகு ஜனவரி 20 ஆம் தேதி வரை பந்தளம் அரண்மனையிலிருந்து வரும் பிரதிநிதி ஐயப்பனை தரிசித்த பின்னர் மகரவிளக்கு பூஜை நிறைவு பெறும். 


2023ல் கோயில் நடை திறந்திருக்கும் நாட்கள் அறிவிப்பு


 



  • மாதாந்திர பூஜை (மாசி): பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை

  • மாதாந்திர பூஜை (பங்குனி) : மார்ச் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை

  • சபரிமலை உற்சவம்: மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை

  • கொடியேற்றம் : மார்ச் 27 ஆம் தேதி

  • பங்குனி உத்திரம் மற்றும் ஆராட்டு விழா : ஏப்ரல் 5 ஆம் தேதி

  • விஷூ திருவிழா : ஏப்ரல் 11 முதல் 19 ஆம் தேதி வரை

  • மாதாந்திர பூஜை (சித்திரை): ஏப்ரல் 15

  • மாதாந்திர பூஜை (வைகாசி) : மே 14 முதல் 19 ஆம் தேதி வரை

  • சிலை பிரதிஷ்டை பூஜை : மே 29 மற்றும் 30

  • மாதாந்திர பூஜை (ஆனி) : ஜூன் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை

  • மாதாந்திர பூஜை (ஆடி) : ஜூலை 16 முதல் 21 ஆம் தேதி வரை

  • மாதாந்திர பூஜை (ஆவணி) : ஆகஸ்ட் 16 முதல் 21 ஆம் தேதி வரை

  • ஓணம் பண்டிகை: ஆகஸ்ட் 29 முதல் 31 ஆம் தேதி வரை

  • மாதாந்திர பூஜை (புரட்டாசி) : செப்டம்பர் 17 முதல் 22 ஆம் தேதி வரை

  • மாதாந்திர பூஜை (ஐப்பசி) : அக்டோபர் 17 முதல் 22 ஆம் தேதி வரை

  • ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள் : நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதி

  • மண்டல பூஜை மகோல்சவம் : நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை

  • மண்டல பூஜை : டிசம்பர் 27