திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டு பாலியல் உறவில் ஈடுபடுவது, பாலியல் வன்கொடுமையில் சேராது என ஒரிசா உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
ஓரிசா மாநிலம் புவனேஷ்வரில் நிமபடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடு அமைந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துவிட்டு, அந்த பெண்ணை அங்கிருந்து அவர் அழைத்து சென்றுள்ளார்.
மேலும், அவருடன் பல நாள்களாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் குற்றம்சாட்டர்பட்டவர். ஆனால், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவரை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துவிட்டு இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, வழக்கை விசாரித்த நீதிபதி பனிகிரஹி, "இந்திய தண்டனை சட்டம், பிரிவு 375இன் கீழ், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளிப்பதை பாலியல் வன்கொடுமை என கருதுவது தவறானது" என்றார்.
"இந்த விவகாரத்தில் சட்டமியற்றுபவர்களின் நோக்கம் தெளிவாக உள்ளது. பெண்கள் விருப்பப்பட்டு உறவில் ஈடுபடும் வழக்குகளில் பாலியல் உறவுகளை ஒழுங்குபடுத்த பாலியல் வன்கொடுமை சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது சமமாக கவலையளிக்கிறது.
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டு பாலியல் உறவில் ஈடுபடுவதாக வரும் புகார்கள் சமூகத்தில் பின்தங்கிய மற்றும் சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகள், கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர். பெண்களின் அவல நிலையை பாலியல் வன்கொடுமை சட்டங்கள் பிரதிபலிப்பதில்லை.
இருந்தபோதிலும், திருமணம் செய்து கொள்வதற்கான பொய்யான வாக்குறுதியில் பெறப்பட்ட சம்மதம் செல்லுபடியாகாது என்பது உறுதியாகிவிட்டது. எனவே, திருமணத்திற்கான பொய்யான வாக்குறுதி பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்று சட்டத்தை வைத்திருப்பது பிழையானது" என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் சமூகத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்கு இணையாக, நீதித்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.