கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 

Continues below advertisement

இந்த வருடத்திற்கான சபரிமலையில், மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி, கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் (கார்த்திகை - 1 ) வழக்கமான பூஜை வழிபாடு நடந்து வருகிறது. சீசனையொட்டி, 2026 ஜனவரி 10-ம் தேதி வரை தரிசன ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி, மண்டல பூஜை இம்மாதம் 27-ம் தேதியும, மகர விளக்கு பூஜை 2026 ஜனவரி 14-ம் தேதியும் நடக்கிறது.

Continues below advertisement

இந்த நிலையில், மண்டல பூஜையையொட்டி, டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதிக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதற்கான ஆன்லைன் முன்பதிவு  நேற்று மாலை தொடங்கியது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்டல பூஜையை முன்னிட்டு தங்க அங்கி அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்படும் டிசம்பர் 26-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 30 ஆயிரம் பக்தர்களும், மண்டல பூஜை தினத்தில் (27-ம் தேதி) 35 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள். மேலும் இவ்விரு நாட்களும், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.