சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றக் கோயில். இந்த கோயிலின் ஐயப்பன் சன்னதிக்கு முன்பு துவாரபாலகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு மேல் சுமார் 42 கிலோ எடை உடைய தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

Continues below advertisement

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவாரபாலகர் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க தகடுகள் மீது தங்க முலாம் பூசுவதற்காக சபரிமலை நன்கொடையாளராக இருந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் மூலம் சென்னையில் உள்ள SMART CREATION நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. பணிகள் முடிந்து மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டபோது 38 கிலோ தங்கம் குறைந்து துவார பாலகர் சிலை தங்க தகடுகள் 4.52 கிலோ மட்டுமே இருந்துள்ளது. இந்த விவகாரம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Continues below advertisement

இதுதொடர்பாக விசாரணை நடத்த கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதற்கட்ட விசாரணையில் சபரிமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து சுமார் 475 கிராம் தங்கம் பிரித்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி மற்றும் பெல்லாரி நகைக்கடை அதிபர் கோவர்தன் ஆகிய 2 பேரையும் நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது.

விசாரணைக்கு பின் இருவரும் கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைதை தொடர்ந்து சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்த வழக்கில் முக்கிய நபர்களை கைது செய்யாதது ஏன்? என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே இந்த வழக்கை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது.