ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தி்ல் இந்தியா வந்தார். அப்போது, அவருக்கு இந்திய பிரதமர் மோடி பல வகை விருந்து அளித்தார். ரஷ்ய அதிபர் புதினுக்கு பரிமாறப்பட்ட விருந்தில் குச்சி காளான் பரிமாறப்பட்டது.
அந்த குச்சி காளானில் அப்படி என்ன சிறப்புகள் இருக்கிறது? என்பதை கீழே காணலாம்.
குச்சி காளான்:
கடல்மட்டத்தில் இருந்து மிகவும் உயர்ந்த குளிர் பிரதேசங்களில் வளரும் குணம் கொண்டது இந்த குச்சி காளான். இதன் காரணமாகவே இமாச்சல், ஜம்மு - காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகளவு விளைகிறது. இதன் அறிவியல் பெயர் மார்ஷெல்லா எஸ்குலெண்டா. இதை ஆங்கிலத்தில் மோரல் என்று கூறுவார்கள்.
இந்த குச்சி காளான் ஏராளமான மருத்துவ குணம் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. அடர் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. தேன்கூடு போல இந்த குச்சி காளான் காட்சி அளிக்கும். அதிக சுவை தருவதாக மட்டுமின்றி நல்ல மணமும் கொண்டது. இந்த குச்சி காளான் சைவ உணவாக இருந்தாலும் இறைச்சி சாப்பிடும் உணர்வைத் தருகிறது.
ராஜ உணவு:
இந்த குச்சி காளானை ராஜ உணவு என்று அழைக்கின்றனர். இதனால்தான் மிகப்பெரிய விருந்துகளில் இந்த உணவு தவிர்க்க முடியாத உணவாக இடம்பெறுகிறது. இந்த குச்சி காளான் மிகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. பி1, பி2, பி3, பி5, பி6, சி, டி. டி2 ஆகிய வைட்டமின்களும் இதில் உள்ளது. மேலும், இரும்பு, பொட்டாசியம், செம்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாது சத்துக்களும் இதில் உள்ளது.
இந்த குச்சி காளான் அதிகளவில் வசந்த காலங்களிலே விளைகிறது. அதாவது, ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலகட்டங்களில் விளைகிறது. அதுவும் மிகவும் அடர்ந்த வனப்பகுதிகளில் தரைப்பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. இந்த குச்சி காளானுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் இருந்து வியாபாரிகள் பலரும் இந்த குச்சி காளானை ஐரோப்பா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
விலை என்ன?
பெனாலிக்ஸ், பிளவனாய்டுகள் அதிகம் கொண்ட இந்த குச்சி காளான் குறைந்த கலோரி கொண்டது. இந்த குச்சி காளான் பசுங்காளானாக விற்பனையாவதை விட உலர் காளானகவே அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குச்சி காளான் ஒரு கிலோ ரூபாய் 35 ஆயிரம் முதல் ரூபாய் 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி ரஷ்ய அதிபருக்கு குச்சி காளான் மட்டுமின்றி முறுக்கு, கர் சந்தோஷ் இனிப்பு, மஞ்சள் பருப்பு தாளிப்பு, ஜோல் மோமோ ஆகியவையும் அரச விருந்தில் உணவாக அளித்தார்.