சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தாண்டு மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது.

Continues below advertisement

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 

Continues below advertisement

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா். தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 25 நாள்களை கடந்துள்ள நிலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சாமி தாரிசனம் செய்வதற்காக நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில் தந்திரிகளுடன் காவல்துறை மற்றும் தேவசம் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கோவில் சன்னிதானம் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கும் அடைக்கப்படும். தற்போது பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மண்டல பூஜை காலத்தில், வரும் டிச.,26, 27ம் தேதிகளில் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 மணிக்கு துவங்குகிறது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login என்ற லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்யலாம்.